IPL வந்தாச்சு.. கல்லாகட்ட துவங்கிய முகேஷ் அம்பானி.. ஸ்பாட்லைட் திட்டம் தெரியுமா உங்களுக்கு..?!
IPL போட்டிகள் விரைவில் துவங்கவுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளின் போது தங்களுடைய பிராண்டுகளை பிரபலமாக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும், இதற்கு பெரும் போட்டி நிலவுகிறது.
இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்று சேர்த்து சங்கமிக்கும் இடம் தான் ஐபிஎல், இத்தகைய தருணத்தில் ஒரு பொருளை விளம்பரம் செய்தால் கண்டிப்பாக அதிகப்படியான வர்த்தகத்தைப் பதிவு செய்ய முடியும். கிட்டத்தட்ட பிரபலமான நாடகங்களுக்கு மத்தியில் வரும் விளம்பரம் போல தான் இது, ஆனால் விலை, பார்வையாளர்கள் என அனைத்துமே பெருசு.
இந்த நிலையில் மார்ச் 22 ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ சினிமா, ஐந்து பிரபல பிராண்டுகளை தன்னுடைய புதிய “பிராண்ட் ஸ்பாட்லைட்” ஆக தேர்வு செய்து, இந்த பிராண்டுகளுடைய பொருட்கள் அல்லது சேவைகளை விளம்பரப்படுத்த உள்ளது.
ஜியோ சினிமா தளத்தில் இந்த 2024 ஆடவர் ஐபிஎல் போட்டிகளுக்கு தம்ஸ் அப், பார்லே, பிரிட்டானியா, டால்மியா சிமெண்ட்ஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் PayZapp ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளது
மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் தொடக்க போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளது, இப்போட்டியின் முதல் ஐந்து ஓவர்களின் போது, இந்த 5 பிராண்டுகளின் ஐ.பி.எல் விளம்பரங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
தொடக்க நாளில் ஐ.பி.எல் போட்டியை காண நாடு முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், இந்த ஐந்து பிராண்டுகளும் முதல் ஐந்து ஓவர்களுக்குள் தங்களின் பிரத்தியேக விளம்பரங்களை ஒளிபரப்ப உள்ளது.
ஜியோ சினிமா பிராண்ட் ஸ்பாட்லைட் திட்டம் மூலம் பிராண்டுகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்துள்ளது. இதை ப்ரீமியம் ஸ்லாட் என கூற முடியும், முதல் 5 ஓவர் கட்டாயம் இருக்கும், அதேபோல் அதிகப்படியான பார்வையாளர்கள் இருப்பார்கள்.
ஜியோ சினிமா பிராண்ட் ஸ்பாட்லைட் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்களிடம் ப்ரீமியம் தொகை வசூலிக்கப்படும், ஆனால் இத்தொகை குறித்த விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.