மீண்டும் வரும் ஐபிஎல் மெகா ஏலம்! ஒவ்வொரு அணியும் தக்கவைக்க போகும் வீரர்கள் யார் யார்?
இந்தியன் பிரீமியர் லீக் தலைவர் அருண் துமால் 2024 சீசன் முடிந்த பிறகு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த ஏலம் தொடர்பான மேற்கொண்ட செய்திகள் ஐபிஎல் 2024 முடிந்த பின்பு வெளியாகும் என்று கூறியுள்ளார். ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், 10 அணிகளும் தங்களது பயிற்சியை துவங்கி உள்ளன. ஐபிஎல் தொடரில் அனைவரும் பெரிதாக பார்ப்பது மெகா ஏலம் தான். ஒவ்வொரு அணியின் உரிமையும் தங்களது அணியை முழுவதும் மாற்றி அமைக்க இது ஒரு நல்ல நேரம் ஆகும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
ஐபிஎல் ஏலம் ஒவ்வொரு வீரரின் மதிப்பை பல மடங்கு உயர்த்துகிறது. 2025 சீசனுக்கு முன்பு நடைபெற உள்ள இந்த மெகா ஏலம் ஐபிஎல்லில் பார்வையையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் முன்பை போலவே 3 முதல் 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. “நிச்சயமாக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மூன்று-நான்கு வீரர்களைத் தக்கவைத்து கொள்ளலாம். பின்னர் நீங்கள் ஒரு புதிய அணியைப் பெறுவீர்கள். அது இன்னும் இந்த போட்டியை சுவாரஸ்யமாக்கும்” என்று ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறினார். உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் புதிய திறமையாளர்களை ஏலத்தின் மூலம் வெளிக்கொண்டு வர முடியும் என்று மேலும் கூறினார்.
இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் போன்ற பிற கிரிக்கெட் நாடுகளிலிருந்தும் திறமையான வீரர்களை வெளிக்கொண்டு வர ஐபிஎல் ஏலம் உதவுவதாக கூறினார். “மெகா ஏலம் நிச்சயமாக நிறைய வீரர்களுக்கு உதவப் போகிறது, உள்நாட்டு வீரர்கள் மட்டுமல்ல சில சந்தர்ப்பங்களில், சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் உதவுகிறது. மேலும், எம்எஸ் தோனி ஐபிஎல்லில் தொடர்வாரா இல்லையா என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள மெகா ஏலம் உதவும்” என்று கூறினார். மேலும், ஐபிஎல் 2024 போட்டிகளை வரவிருக்கும் டி20 உலக கோப்பையை மனதில் வைத்து திட்டமிட்டு இருப்பதாகவும், மே மாதம் கடைசி வாரத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிவடையும் என்றும் கூறினார். ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது. முதல் போட்டியிலேயே சென்னை அணி விளையாடுவதால் பலரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.