IPL2024: சென்னை – குஜராத் அணிகள் இன்று மோதல்; 2 ஆவது வெற்றி யார் பக்கம்?
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் போட்டியில், தோனி கொடுத்த கேப்டன்ஷிப் என்ற மிகப்பெறிய வேலையை கன கச்சிதமாக முடித்த ருதுராஜ் அதே உற்சாகத்தோடு இரண்டாவது போட்டியில் களமிறங்கவுள்ளார். இவருக்கு ஏற்றார் போல் கான்வே இல்லாத குறையை ரச்சின் ரவீந்திரா தீர்த்து வருகிறார். முதல் போட்டியில் சிக்ஸ் அடித்து எல்லாம் ஆச்சரியப்படவைத்த ரஹானே, மிச்செல், ஷிவம் துபே, ரிஸ்வி, தோனி என பேட்டிங் வரிசை அசுர பலத்தில் உள்ளது. பந்துவீச்சில் பதிரனா வருகை அணிக்கு கூடுதல் பலம் அளித்தாலும் யாரை உட்காரவைப்பது என்பதில் சிக்கல் உள்ளது.
இளம் கேப்டனான ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியில் அதிரடி மன்னன் சாய் சுதர்சன், ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் சேப்பாக்கம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
கணக்கை சரி செய்யுமா சிஎஸ்கே?
இரு அணிகளும் இதற்கு முன்பு ஐந்து முறை மோதியுள்ளதில் குஜராத் அணியே மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது. சிஎஸ்கேவுக்கு கணக்கை சரி செய்யும் நேரமிது.
உள்ளூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டு அமர்க்களமாக தொடங்கி இருக்கும் சென்னை அணி அந்த உத்வேகத்தை தொடரும் முனைப்புடன் களம் இறங்குகிறது.
2ஆவது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.