மத்திய தரைக்கடலுக்கு ஈரான் போட்ட ஸ்கெட்ச்! ஓங்கும் ஹவுதியின் கை! உற்று நோக்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ள ஈரான், தன்னுடைய கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் விதமாக புதியதாக இரண்டு நவீன ஏவுகணைகளை கடற்படையில் இணைத்திருக்கிறது.
சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த அக். 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
இந்த போரை நிறுத்தக்கோரி அரபு நாடுகள் ஐநா சபையில் தொடர்ந்து சில தீர்மானங்களை கொண்டு வந்தன. ஆரம்பத்தில் கொண்டு வந்த தீர்மானங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நட்பு நாடுகள் தோற்கடித்தன. ஆனால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேறியுள்ளன. ஆனால், ஐநா தீர்மானங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்று எந்த நாடுகளுக்கும் கட்டாயம் கிடையாது. எனவே இஸ்ரேல், பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவில்லை.
இப்படி இருக்கையில், ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வந்தது. ஐநா பொதுச்சபை போல, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது. ஒரு முறை இங்கு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், அதை அமல்படுத்த வேண்டும். எனவே ரஷ்யாவும், சீனாவும் கொண்டுவரும் மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானங்களை அமெரிக்கா, தனது வீட்டோ பவரை பயன்படுத்தி தள்ளுபடி செய்து வருகிறது. எனவே தற்போது வரை இங்கு போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
நிலைமை இப்படி இருக்கையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹவுதி படைகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் என்வோ தற்போது வரை பாலஸ்தீனத்திற்குதான் சப்போர்ட் செய்து வருகிறது. ஆனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் விஷயத்தில் வரும் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் மௌனம்தான் காத்து வருகிறது. இந்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
இது குறித்து பேசியுள்ள ஈரானின் புரட்சிகர காவலர்களின் பிரிகேடியர் ஜெனரல், முகமது ரெசா நக்டி, “அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காஸாவில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மத்தியதரைக் கடல் மூடப்பட வேண்டி வரும்” என்று எச்சரித்துள்ளார். புவியியல் ரீதியாக மத்திய தரைக்கடலுக்கும், ஈரானுக்கும் தொடர்பே கிடையாது. அப்படி இருக்கும்போது இப்படியான எச்சரிக்கை எப்படிவிட முடியும் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
தற்போது மத்திய தரைக்கடல் வழியாக செல்லும் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்தியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் ஒன்றும், இந்திய பணியாளர்களுடன் அரபு நாடுகளிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த கப்பல் மீதும் தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர். எனவே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மூலம் மத்திய தரைக்கடலை ஈரான் கன்ட்ரோல் செய்ய முயற்சிக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள், போர் நிறுத்தம், கப்பல்கள் மீது தாக்குதல் இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கையில், மறுபுறம் ஈரான் தற்போது தனது கடற்படையில் புதிய ஏவுகணைகளை இணைத்திருக்கிறது. நசீர், நாசி என இரண்டு ஏவுகணைகளை ஈரான் இணைத்திருக்கிறது. இதில் நசீர் எனும் ஏவுகணை சுமார் 1000 கி.மீ வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது. அதே நேரம் தனது இலக்கை நடுவழியில் மாற்றும் திறன் கொண்டது. நாசி ஏவுகணை 100 தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் தன்மை கொண்டது.
இந்த ஏவுகணைகள் ஈரான் வசம் இருக்கிறது எனில், அது ஹவுதி கிளர்ச்சியாளர் கையிலும் போக வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.