வரலாற்று சரித்திரம் படைப்பாரா அஸ்வின்? இன்னும் 4 விக்கெட் எடுத்தால், உலக அளவில் 2வது வீரர்

R Ashwin : இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் வரலாற்று சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு இருக்கிறது.
சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதால் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முதல் டெஸ்டில் இங்கிலாந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது. எப்போதுமே ஜடேஜா எதிர் முனையில் இருந்து பந்து வீசுவார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அஸ்வினும் நெருக்கடியை ஏற்படுத்தி விக்கெட்டுகளை எடுப்பார்கள்.
இருவரும் இணைந்து 500 விக்கெட்டுகளுக்கு மேல் ஜோடியாக எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜடேஜா இரண்டாவது டெஸ்டில் இல்லாதது அஸ்வினுக்கு பெரும் இழப்பாக பார்க்கப்படும். எனினும் அஸ்வின் போன்ற சாம்பியன் வீரர்கள் எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் அதற்கு சரிசமமாக தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி ஆச்சரியம் கொடுப்பார்கள்.
இந்த வகையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்னும் நான்கு விக்கெட்டுகளை இரண்டாவது டெஸ்டில் வீழ்த்தினால், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்தியாவை பொறுத்தவரை கும்ப்ளே தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அஸ்வின் நான்கு விக்கெட்டை கைப்பற்றினால் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
அது மட்டுமில்லாமல் உலக அளவில் ஒரு சாதனை படைக்க அஸ்வின் காத்திருக்கிறார். தற்போது அஸ்வின் 96 போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இரண்டாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினால் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்னால் இலங்கை அணியின் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.