வாய்ப்புண் பிரச்சனையா ? மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால்..
வாய்ப் புண்கள் அதிகமாக பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடமும் அதிகம் காணலாம். வாய்ப் புண்கள் பல காரணங்களால் உண்டாகலாம்.பெரும்பாலும் நாம் உணவை மென்று உண்ணும்போது தவறுதலாக கன்னத்தின் உள் பகுதியைக் கடித்துக்கொள்வதுண்டு. அது புண்ணாக சில நாட்கள் நீடிக்கும். கூர்மையான பற்கள் உரசுவதாலும் குத்துவதாலும் புண் உண்டாகும்.
வாய்ப் புண்கள் உடலில் வேறு கோளாறுகள் காரணமாகவும் உண்டாகலாம். குறிப்பாக இரும்பு சத்து குறைபாட்டினால் உண்டாகும். இரத்தச் சோகை, வைட்டமின்கள் குறைவு, குரோனர்ஸ் நோய் போன்ற காரணங்களாலும் ஏற்படலாம்.
திரும்ப திரும்ப தொடர்ந்து வாய்ப் புண்கள் உண்டாவதற்கு வேறு தூண்டும் காரணங்கள் இருக்கலாம். அவை வருமாறு:
வயிற்றில் முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பது தான் வாயில் புண் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாகும்.
வயிற்றை சரியாக சுத்தம் செய்யாதவர்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு அடிக்கடி வாய்ப்புண் ஏற்படலாம்.
வயிற்றில் சூடு அதிகரிக்கும் பொழுதும் வாயில் புண் வரும்.
உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்.
நல்ல முழுமையான தூக்கம் இல்லாவிட்டாலும் இந்த பிரச்சனை வரக்கூடும்.
நீண்ட காலமாக நீடிக்கும் மன அழுத்தம்.
உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் வாய்ப்புண் வரலாம்.
மரபணு – சில குடும்பங்களில் வாய்ப்புண் அதிகம் காணப்படும். சுமார் 40 சதவிகிதத்தினர் தங்கள் குடும்பங்களில் வழிவழியாக வாய்ப் புண்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் இது மரபணு காரணமாக உண்டாவதாகவும் கருதலாம்.
மன உளைச்சலும் பரபரப்பான மனநிலையும் ( Stress and Anxiety )
ஹார்மோனில் மாற்றங்கள் – சில பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் வாய்ப் புண்கள் உண்டாகின்றன.
புகைத்தலை நிறுத்தியதும் – புகைப்பதை நிறுத்தியதும் உடலில் உண்டாகும் மாற்றங்கள் காரணமாக வாய்ப் புண்கள் உண்டாகலாம். அனால் இதற்காக மீண்டும் புகைக்க வேண்டாம். இந்த புண்கள் தானாக ஆறிவிடும்.
சில சமயங்களில் இதே வாய்ப் புண்கள் வாய்ப் புற்று நோயாகவும் இருக்கலாம். அது பெரும்பாலும் நாக்கின் அடியில் உண்டாகும். அதிகம் புகைத்தல்,, அதிகம் மது அருந்துதல் போன்ற பழக்கமுள்ளவர்களுக்கு இதுபோன்ற வாயில் புற்று நோய் உண்டாகி புண் ஆகலாம்.இது ஆபத்தானது. இதற்கு உடனடி சிகிச்சை தேவை!
பெரும்பாலும் வாய் புண் 1-2 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். இதை சரி செய்வதற்கான குறிப்பை நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்வோம். வாய் புண்ணிலிருந்து விடுபட காய்ச்சாத குளிர்ந்த பாலை வாயில் வைத்து 2-3 நிமிடங்களுக்கு சுழற்ற வேண்டும். இதை 3-4 முறை செய்யவும். இந்த குறிப்பை பின்பற்றி வாய் புண்களில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இது சூட்டை குறைத்து வாய் புண்களில் இருந்து நிவாரணம் தரும்.
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் ஆகியவற்றை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவினால் புண் ஆறும்.
மிதமான சூடுள்ள நீரில் உப்பு, எலுமிச்சை சாற்றைக் கலந்து கொப்பளித்தால் வலி நீங்கும். மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய பின், மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
எந்த உணவு முக்கியம்?
பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சையிலைக் காய்கள், வெல்லம், தேன், பேரீச்சை, முளை கட்டிய பயறுகள், கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை நிச்சயம் தடுக்கலாம்.
தடுக்கும் முறைகள்
எதனால் தொடர்ந்து வாய்ப் புண்கள் உண்டாகிறது என்பது தெரியாத காரணத்தினால் சரியான தடுப்பு முறைகளைக் கூறுவது கடினம். ஆனால் பொதவாக சில சுகாதார முறைகளைக் கடைப்பிடிப்பதின் மூலமாக வாய்ப் புண்கள் உண்டாவதை ஓரளவு தடுக்கலாம். அவை வருமாறு:
* வாய்க்குள் உரசி காயத்தை உண்டுபண்ணக்கூடிய பல் தேய்க்கும் பிரஸ்களைத் தவிர்த்து மேன்மையானவற்றைப் பயன்படுத்தவேண்டும்.
* புண்களை உண்டுபண்ணக்கூடிய காரமான உணவுவகைகளைத் தவிர்த்தல்.
* மன அழுத்தம், மன உளைச்சல், பரபரப்பான மனநிலை போன்றவற்றைக் குறைத்தல்.
* அவ்வப்போது பல் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது.
* தொடர்ந்து வாய்ப் புண்கள் நீடித்தால், காரணத்தைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது.