ஹர்திக் பாண்டியா தான் கேப்டன்? ரோஹித்தை புறக்கணித்த ஐசிசி.. ரசிகர்கள் கொதிப்பு.. என்ன நடந்தது?

மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான விளம்பரத்தில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா புகைப்படம் இடம் பெற்று இருக்கிறது.

டி20 உலகக்கோப்பை அட்டவணை மற்றும் விளம்பரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டு வரும் நிலையில், அவர்கள் ஏன் பாண்டியாவை இந்திய அணியின் கேப்டனாக முடிவு செய்து விளம்பரத்தில் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பாண்டியா காயமடைந்து கிரிக்கெட் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் அவர் முழு உடற்தகுதியுடன் ஆடினால் மட்டுமே டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெற முடியும்.
இதனிடையே ரோஹித் சர்மா டி20 உலகக்கோப்பையில் ஆட விரும்புவதாக அறிவித்துள்ளார். அவரே அணியின் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்த விளம்பரத்தில் பாகிஸ்தான் டி20 அணி கேப்டன் ஷஹீன் அப்ரிடி ஒரு புறமும், ஹர்திக் பாண்டியா மறுபுறமும் இடம் பெற்றுள்ளனர்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இடம் பெற வேண்டிய இடத்தில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார் என தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா ரசிகர்கள், அவரை புறக்கணிக்க வேண்டும் என்றே ஐசிசி இப்படி செய்துள்ளதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *