லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா? – தீயாய் பரவும் தகவல்
தொழிலதிபரும் நடிகருமான லெஜன்ட் சரவணன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிரபல ஜவுளி மற்றும் ஷாப்பிங் கடையின் உரிமையாளராக இருப்பவர் லெஜண்ட் சரவணன். சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிரபல விளம்பர பட இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஊர்வசி ரவுத்தலா, விவேக் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். தான் தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்று லெஜெண்ட் சரவணன் கூறியிருந்தார். இதற்காக அவர் தயாராகி வந்த நிலையில், அவரது அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கி சட்டை, தனுஷ் நடித்த கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் லெஜன்ட் சரவணனை சந்தித்த துரை செந்தில்குமார், அவரிடம் கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை லெஜன்ட் சரவணனுக்கு பிடித்துப் போனதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
விரைவில் லெஜன்ட் சரவணன் மற்றும் துரை செந்தில்குமார் இணையவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லெஜெண்ட் சரவணன் தனது முதல் படத்தை மிகவும் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்திருந்தார். அந்த வகையில் அவரது இரண்டாவது படம் எப்படி இருக்கும், யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.