இந்த பாடலை எல்லாம் பாடியது இவரா? பவதாரிணியின் திரைப்பயணம்

இசைஞானி இளையராஜாவின் இசைக் குடும்பத்தில் மயக்கும் மெல்லிசையாய் 1976-ஆம் ஆண்டு பிறந்தவர் பவதாரிணி. 1984ல் வெளியான மைடியர் குட்டிச்சாத்தான் படத்தில் முதன் முறையாக பாடிய பவதாரிணியின் புகழின் தொடக்கமாக இருந்தது ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா பாடல்தான். சுசிலா தொடங்கி ஜானகி மற்றும் சித்ரா வரை திரைப்பாடல்களில் வெற்றிக்கொடி நாட்டிய ஜாம்பவான்களுக்கு இடையே, தனித்துவம் மிக்க குரலால் அனைவரையும் கவர்ந்திழுத்தார் பவதாரிணி.

அதனால், அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பவதாரிணியின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. தமிழ்நாடு கொண்டாடிய பவதாரிணியை உலகமே கொண்டாடியது, பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலால் தான். அந்த பாடலுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் அளித்து கவுரவித்தது மத்திய அரசு

அழகி, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடி தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக திகழ்ந்தார் பவதாரிணி. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பாடியுள்ள பவதாரிணி, நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரண்ட்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.

பிர் மிலேங்கே, இலக்கணம், மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தான், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி தொடர் சிகிச்சையில் இருந்தார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், தனது 47-ஆவது வயதில் பவதாரிணி காலமானார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *