குல்தீப் யாதவுக்கு இப்படி செய்தது நியாயமா? குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்த பிசிசிஐ

சமீபத்தில் பிசிசிஐ ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை அளித்த குல்தீப் யாதவ் கிரேடு பி’யில் குறைந்த சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
பிசிசிஐ ஒப்பந்ததில் கிரேடு ஏ+ இல் இடம் பெறும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாயும், கிரேடு ஏ’வில் இடம் பெறும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும், கிரேடு பி’யில் இடம் பெறும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், கிரேடு சி’யில் இடம் பெறும் வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் அளிக்கப்படுகிறது.
இதில் குல்தீப் யாதவ் பி கிரேடில் இடம் பெற்று இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு 9 டி20 போட்டிகளில் இடம் பெற்று 13.14 என்ற பவுலிங் சராசரியில், 14 விக்கெட்கள் கைப்பற்றினார். அதிலும் அவர் ஓவருக்கு 5.96 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். டி20 போட்டிகளில் இது சிறந்த பதிவாகும்.
ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 2023 உலகக்கோப்பை தொடரில் மட்டுமே அவர் 11 போட்டிகளில் 15 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அவர் 2023இல் டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. இந்த நிலையில் சிறப்பாக செயல்படும் குல்தீப் யாதவுக்கு 3 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் அளித்துள்ளது பிசிசிஐ. அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பதே அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
2024இல் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்று இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தத்தில் குல்தீப் யாதவுக்கு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல் :
கிரேடு ஏ+ (4 வீரர்கள்)
ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா.
கிரேடு ஏ (6 வீரர்கள்)
ஆர் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா.
கிரேடு பி (5 வீரர்கள்)
சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
கிரேடு சி (15 வீரர்கள்)
ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார்.