இப்பவே இப்படியா! போக போக சீனை பாருங்க… போட்டியாளர்களை மிரள வைக்கும் டாடா பன்ச்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரின் 2023ம் ஆண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் டாடா பன்ச் கார், 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,29,895 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,50,182 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஏனெனில் டாடா பன்ச் கார் முன்பு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைத்து வந்தது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது ஓரளவிற்கு குறைவான விலையில் வந்துள்ளதால், விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக டாடா பன்ச் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம். இந்திய சந்தையில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை 25 kWh மற்றும் 35 kWh பேட்டரி ஆப்ஷன்கள் ஆகும். இதில், 25 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 35 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் (MG Comet) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிட்டு வருகிறது. இது தவிர டாடா டியாகோ இவி (Tata Tiago EV) எலெக்ட்ரிக் காருக்கும் இது சவால் அளிக்கும்.