திருமணத்திற்கு பின் உங்க EX-ஸுடன் நட்பில் இருப்பது சரியா..? உளவியல் நிபுணர் கூறும் கருத்து..!
காதல் உறவுகள் பெரும்பாலும் கசப்புகளுடன் தான் முறிவுக்கு வரும். ஆனால், ஒரு சில சமயங்களில் சூழ்நிலையின் கட்டாயம் காரணமாக காதலர்கள் மன ஒற்றுமையுடன் பிரிவது உண்டு. உதாரணத்திற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பது, கல்வி அல்லது வேலைவாய்ப்பிற்காக யாரேனும் ஒருவர் வெளிநாடு செல்ல நேரிடுவது போன்ற ஏதோ ஒரு காரணத்தால் கனத்த இதயத்துடன் பிரிந்து செல்ல நேரிடும்.
இத்தகைய சமயங்களில் காதலர்கள் ஒரு புரிந்துணர்வோடு நட்பில் இணைந்திருக்க விரும்புவது உண்டு. அதிலும் சிலர் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்த பிறகும் கூட இதுபோல நட்பில் இருக்க விரும்புவார்கள். பொதுவாக இத்தகைய உறவு முறையை நம் சமூகம் விரும்புவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, இது நல்லதா என்ற கேள்விக்கு பதில் காண வேண்டியுள்ளது.
இதுகுறித்து அம்பிகா சாவ்லா என்ற உளவியல் சிகிச்சை நிபுணர் பதில் அளிக்கையில், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒருவர் தங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலியுடன் நட்பை தொடரலாம் என்று தெரிவிக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நீண்ட கால நண்பர்கள் தங்கள் நட்பை காதலாக மாற்றிக் கொண்ட நிலையில், அது ஒத்து வராது என்பதை புரிந்து கொள்ளும் பட்சத்தில் மீண்டும் நண்பர்களாக தொடரலாம்.
காதலன், காதலி இருவருமே தங்கள் மனதை முழுவதுமாக பறிகொடுத்து விடாமல், இயல்பான புரிதலுடன் இருந்தால் நட்பை தொடரலாம்’’ என்று தெரிவித்தார்.
அதே சமயம், தங்களுடைய முன்னாள் காதலை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கின்ற இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் அதுகுறித்த மனநல ஆலோசனைக்காக அம்பிகா சாவ்லாவை அணுகி வருகின்றனர். குறிப்பாக அந்த உறவை முற்றாக இழக்கப் போகிறோம் என்ற கவலை அவர்களுடைய மனதை ஆட்கொள்கிறது.
இதுகுறித்து அம்பிகா சாவ்லா கூறுகையில், “காதல் உறவை முழுவதுமாக மறந்துவிட வேண்டும் என்று எண்ணி சிலர் அதையே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுடைய நிகழ்கால சந்தோஷம், நிம்மதி போன்றவை பறி போய்விடுகின்றன. மேலும் தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற சிந்தனையில் மூழ்குகின்றனர். அதுவே அவர்களுக்கு மிகுதியான கவலையை ஏற்படுத்துகிறது.
சிலர் தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி மீது மிகுதியான அன்பு கொண்டு, தன்னுடைய தவறால்தான் இந்த உறவை இழக்க நேரிட்டது என்று வருந்துகின்றனர். இதனால் அவர்கள் மீண்டும் காதலை தொடரத்தான் விரும்புவார்களே தவிர, நட்பாக இருக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.
நட்புக்கான விதிமுறைகள் :
காதலை கடந்து மீண்டும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள் பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நீங்கள் காதலிக்க தொடங்கியுள்ள புதிய நபருடன், உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை ஒப்பிட்டு பேசக் கூடாது.
நீங்கள் இருவரும் தனிமையில் சந்திக்க கூடாது. அது உங்கள் புதிய பார்ட்னருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்.
உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலியிடம் உங்களுடைய தற்போதைய காதல் குறித்து விவாதிக்கக் கூடாது.
அதேபோல உங்கள் பழைய காதல் நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்க கூடாது. அவ்வாறு விவாதித்தால் நட்பும் முறிந்து விடும்.