உங்கள் முதலீடு முதிர்ச்சி அடைந்துவிட்டால் அதனை மறு முதலீடு செய்வது லாபமா?

நிலையான வைப்புத்தொகை, சேமிப்பு பத்திரங்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு தொகையை முதலீடு செய்துள்ளீர்கள். முதலீடு காலம் முடிந்து முதிர்வு தொகை கைக்கு வர இருக்கிறது என வைத்து கொள்வோம்.

இந்த சூழலில் அதனை மறு முதலீடு செய்வது லாபமா அல்லது கிடைத்த வரை போதும் என பணத்தை திரும்ப பெறுவது லாபமா என்ற சந்தேகம் பலருக்கும் எழும். இந்த முடிவினை எடுப்பதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றை விரிவாக பார்க்கலாம்.

நிதி இலக்கினை அடைந்துவிட்டீர்களா?: உங்களின் தற்போதைய நிதி இலக்கினை அடைந்துவிட்டீர்களா என்பதை மதிப்பீடு செய்யுங்கள். நீண்ட கால வளர்ச்சியை நீங்கள் இலக்காக கொண்டிருக்கிறீர்களா? அல்லது உடனடி வருமானத்தை எதிர்பார்க்கிறீர்களா என்பதை மதிப்பாய்வு செய்யுங்கள். தற்போது உங்களுக்கு உள்ள முதலீட்டு விருப்பங்களை ஆய்வு செய்து, முன்பு இருந்ததை விட சிறந்த வாய்ப்புகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சந்தை நிலைமைகள்: நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை என்ன? விலைவாசி, சந்தை நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள். வட்டி விகிதங்கள், பணவீக்க விகிதங்கள் மற்றும் ஒட்டுமொத்த சந்தை ஸ்திரத்தன்மையை கவனித்தால், உங்களது முதிர்வுத் தொகையை மீண்டும் முதலீடு செய்யலாமா அல்லது தற்போதைய சந்தை சூழல்களை கருத்தில் கொண்டு பணத்தை தக்க வைத்து கொள்ளலாமா என்ற முடிவினை எளிதாக எடுக்க முடியும்.

மீண்டும் ரிஸ்க் எடுக்க தயாரா?: முதலீடுகள் பாதுகாப்பானவை என்றாலும் சந்தை சார்ந்த முதலீடுகள் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. எனவே தற்போதைய பங்குச்சந்தை நிலவரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறதா, உங்கள் பணத்தை முதலீடு செய்து மீண்டும் ஒருமுறை ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறீர்களா என்பதை அடிப்படையாக கொண்டு முடிவெடுப்பது புத்திசாலித்தனம்.

வரி விகிதங்களை கவனத்தில் கொள்ளுங்கள்: முதலீட்டின் மூலம் கிடைக்க கூடிய தொகையை திரும்ப பெறுவதன் மூலம் நீங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டுமா அல்லது மறு முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கு எத்தகைய வரி சார்ந்த சலுகைகள் கிடைக்கின்றன என்பதை மதிப்பீடு செய்யுங்கள்.

தற்போதைய சூழலில் உங்களுக்கு கூடுதலாக வரிச் சலுகை தேவைப்படுகிறதா, இந்த முதலீடு மூலம் அந்த வரிச்சலுகை உங்களுக்கு கிடைக்குமா என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

பணத்தை பெருக்கும் உத்திகள்: உங்கள் பணத்தை கொண்டு அதிகபட்ச வருவாய் ஈட்ட நிதி இலக்குகளின் அடிப்படையில் உங்கள் முதலீட்டை தொடர்ந்து சரி செய்வது அவசியம். உதாரணமாக வெறும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்திருந்தால் , உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பரஸ்பர நிதிகள், பங்குகள், ரியல் எஸ்டேட் அல்லது அரசாங்கத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யுங்கள்.

திரும்பப் பெறுதல் மற்றும் மதிப்பீடு செய்தல்: உங்கள் நிதி இலக்குகளை மறுமதிப்பீடு செய்யுங்கள், உங்கள் இலக்குகள் மாறிவிட்டதா என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப உங்களது முதலீட்டு திட்டங்கள் அல்லது இலக்குகளை சரி செய்யுங்கள்.

அவசரகால நிதி: உங்களிடம் அவசரகால நிதி இல்லை என்றால் எதிர்பாராத செலவுகளுக்காக அவசர கால நிதியாக முதிர்ச்சியடைந்த நிதிகளில் ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பது நன்று.

கடன்களை திருப்பி செலுத்துதல்: உங்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படும் கடன்கள் இருந்தால் அவற்றை திருப்பி செலுத்துவதற்கு முதிர்ச்சி அடைந்த நிதிகளில் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *