பொட்டு தயாரிச்சு வித்தா இவ்ளோ லாபமா! மக்களே முதல்ல இத படிங்க!
தற்போது பலருக்கும் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. எந்த மாதிரியான தொழில் தொடங்க வேண்டும், எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருவாய் ஈட்டலாம் என பல வழிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த பிஸினஸ் யோசனை..
பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டினை தயாரிக்கும் தொழில் தான் இது. இந்த தொழிலுக்கு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வங்கி கடனும் கிடைக்கிறது. முதல் கட்டமாக ஒரு சிறிய இயந்திரத்தை வைத்து வீட்டில் இருந்தபடியே தொழிலை தொடங்கலாம்.
இதற்காக பிரத்யேக படிப்போ, பயிற்சியோ பெரிதளவில் தேவையில்லை. பெண்கள் எளிதாக தொடங்கக்கூடிய ஒரு தொழில் இது. பொட்டு தயாரிக்கும் தொழில் என்பது பருவத்தை சார்ந்தது அல்ல ஆண்டின் எல்லா மாதங்களிலும் இதனை செய்ய முடியும் எனவே லாபமானதாக இருக்கும்.
எப்படி தொடங்குவது: காதி மற்றும் கிராம தொழில்களுக்கான ஆணையம் , பொட்டு தயாரிக்கும் தொழிலை தொடங்குவதற்கான வழிகாட்டுதலை நிறுவியுள்ளது.
இதில் அவர்கள் குறிப்பிட்டுள்ள திட்ட அறிக்கையின் படி , பெரிய அளவிலான பொட்டு தயாரிக்கும் ஆலையை நிறுவ 18.85 லட்சம் செலவாகும், இதில் நீங்கள் 1.89 லட்சம் ரூபாயை மூலதனமாக போட்டால் போதும், மீதி பணம் உங்களுக்கு வங்கியில் கடனாக கிடைத்துவிடும்.
திட்டத்திற்கான செலவு:
கட்டுமானம் மற்றும் பிற பணிகள் – 6 லட்சம் ரூபாய்
இயந்திரங்கள் – 6.25 லட்சம் ரூபாய்
மரச்சாமான்கள் – 50 ஆயிரம் ரூபாய்
வேலைக்கான மூலதன தேவை – 5.18 லட்சம் ரூபாய்
மொத்தம் – 17.93 லட்சம் ரூபாய்
சொந்த மூலதனம் 10% – 1.79 லட்சம் ரூபாய்
கடன் – 11.48 லட்சம் ரூபாய்
வேலை மூலதனம் – 4.66 லட்சம் ரூபாய்
லாபம் தருமா?: பொட்டு தயாரிக்கும் தொழிலை முறையாக திட்டமிட்டு செய்தால் லட்சங்களில் வருவாய் ஈட்ட முடியும் என சொல்லப்படுகிறது. அரசு வழங்கியுள்ள அறிக்கையின் படி , சரியான முறையில் பொட்டுகளை தயாரித்து, மார்க்கெட்டிங் செய்து விற்பனைக்கு கொண்டு சென்றால் ஆண்டுக்கு 45.60 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேன்சி கடைகள், பியூட்டி பார்லர்கள், கடைகள், ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை கொண்டு சென்று விற்கலாம். ஆன்லைன் வாயிலாக வித விதமான பொட்டுகளை விற்பதன் மூலமும் லாபம் காண முடியும் என சொல்லப்படுகிறது.
காதி மற்றும் கிராம தொழில்களுக்கான ஆணையம் அளித்துள்ள அறிக்கையின் படி 5 ஆண்டுகளுக்கான லாப அறிக்கை கணிக்கப்பட்டுள்ளது . முதலாவது ஆண்டில் 2.68 லட்சம் ரூபாய் லாபம் காணலாம் என்றும், இரண்டாவது ஆண்டில் அது 3.52 லட்சமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொட்டு தயாரிக்கும் ஆலை மூலம் மூன்றாவது ஆண்டில் 5.62 லட்சமும் நான்காவது ஆண்டில் 7.61 லட்சமும் ஐந்தாவது ஆண்டில் 9.48 லட்சம் ரூபாயும் லாபமாக கிடைக்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.