திருச்செந்தூர் கோயில் தெப்பக்குளத்தில் யாருப்பா அது.. அப்படியே அமுக்கிய ஆபிசர்.. ஆள் யார் தெரியுமா?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அஜின் திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அவரை திருச்செந்தூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாவகமாக மடக்கி பிடித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்த 23 வயதாகும் அஜின் என்பவர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் போலீசிடம் சிக்காமல் இருக்க அஜின் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார். அவரை கன்னியாகுமரி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் போலீசாருக்கு இருப்பிடம் குறித்து சரியான தகவல்கள் தெரியாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜின் திருச்செந்தூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.. அவர் நேற்று காலையில் திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழாவிற்காக தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜிஸ்பாபு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
அவர் தெப்பக்குளம் பகுதிக்கு வந்ததைக் கவனித்த அஜின் உடனே தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள கல்மண்டபத்துக்கு நீந்தி சென்று, அங்கு பதுங்கி கொண்டிருந்தார். இதைப்பார்த்த சப்-இன்ஸ்பெக்டர், பொதுமக்கள் உதவியுடன் அஜினை மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் அவரை திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸார் நேரில் வந்து அஜினை கைது செய்து அழைத்து சென்றனர்.
சாமி கும்பிட வந்த திருச்செந்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்த திருடனை லாவகமாக கைது செய்த சம்பவம் திருச்செந்தூர் கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.