தமிழகத்தை பின்பற்றுகிறதா ஒடிசா..?
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் துணிச்சலையும், தியாகத்தையும் போற்றுவதே அரசின் இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உறுப்பு தானத்தை கௌரவிப்பதன் மூலம் சமூகத்தில் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். சமுதாயத்திலிருந்து அதிகமானோர் இதற்கு முன்வருவார்கள். இது ஒரு சிறந்த பணி என்றார். ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவரின் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுப்பது தைரியம். இந்த முடிவு பலருக்கு புது வாழ்வு அளிக்கிறது.
ஒடிசா அரசு ஏற்கனவே 2019 ஆம் ஆண்டில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை (SOTTO) நிறுவியுள்ளது என்று முதல்வர் கூறினார். அத்துடன், தமிழ்நாட்டைப் போன்றே, இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஏற்கனவே, 2020 ஆம் ஆண்டில், உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்காக அரசாங்கம் சூரஜ் விருதை நிறுவியது குறிப்பிடத்தக்கது.