ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகுகிறாரா சூரியகுமார் யாதவ்? உடல்நிலை குறித்து அவரே சொன்ன தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் டி20 வீரராக அறியப்படுபவர் சூரியகுமார் யாதவ். இவர் கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் எந்தத் தொடரிலும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் சூரியகுமார் யாதவுக்கு ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா என்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் தற்போது முழு உடல் தகுதியை பெரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஐபிஎல் தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ள நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இதுகுறித்து சூரிய குமார் யாதவ் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் சிறப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். சிலருக்கு என்னுடைய உடல் தகுதி குறித்து சந்தேகம் இருக்கிறது என நினைக்கிறேன். ஸ்போர்ட்ஸ் ஹெரனியா என்ற பிரச்சினைக்காக தான் நான் சில வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டேனே தவிர என்னுடைய காலில் எந்த பிரச்சினையும் இல்லை.
தற்போது முழு உடல் தகுதியை பெரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். விரைவில் உங்களை களத்தில் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். சூரியகுமார் யாதவ் தற்போது தான் மெல்ல மெல்ல பேட்டிங் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். இது மும்பை அணிக்கு பாசிட்டிவான விஷயமாக பார்க்கப்படுகிறது. எனினும் அவர் 100 சதவீதம் முதல் தகுதியை பெறவில்லை.
தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் சூரியகுமார் உடல் தகுதியை ஆராய்ந்து அனுமதி அளித்தால் மட்டுமே அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் டி20 உலக கோப்பை நடைபெறுகிறது. இதில் சூரியகுமார் யாதவின் பங்கு மிகவும் முக்கியமாகும். இதனால் அவருடைய உடல் தகுதியில் பிசிசிஐ அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.