தமிழ்நாட்டிற்கு அள்ளிக் கொடுக்க போகிறதா மத்திய அரசு? எல்லா பக்கமும் வந்தே பாரத் இரயில்கள்… 2024 பட்ஜெட்!!
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் 2024-25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை வாசித்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் நிறைய முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு கூடுதல் வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும் என்கிற அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் துவங்கவுள்ள 2024- 25ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அறிவித்தப்படி, இன்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன் வாசித்து வருகிறார். இன்னும் சில மாதங்களில் நாடு தழுவிய அளவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த பட்ஜெட்டில் மிக பெரிய அளவிலான திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாது என கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, 2024 ஜூலை மாதம் வரையிலான பாதி பட்ஜெட் மட்டுமே தற்போதைக்கு தாக்கல் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த 2024 பட்ஜெட்டில் மிக முக்கிய அம்சங்களாக, பெட்ரோல்/ டீசல் விலை மீதான வரி குறைப்பு, கலால் வரி குறைப்பு மற்றும் தனிநபர் வருமான வரி குறைப்பு உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புதிய விமான நிலையங்கள் மற்றும் விரைவுச்சாலைகளுக்கான அப்டேட்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
2024 பட்ஜெட்டில் இந்தியன் இரயில்வே துறை பெரிய நிதி ஒதுக்கீட்டை பெறும் என கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகத்துக்கு சொந்தமான சொத்துகளை மறுசீரமைப்பதற்கும், உள்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் நிதி ஒதுக்கப்படலாம். அதேநேரம், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் இரயில்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளும் கட்டாயம் 2024 பட்ஜெட்டில் இருக்கும்.
ஏனெனில், வந்தே பாரத் மற்றும் சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் இரயில்களை நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரயில்கள் என்பதாலும், குறைந்த எடையில் அதிவேகமாக செல்லக்கூடிய இரயில்கள் என்பதாலும் இவற்றிற்கு இந்தியன் இரயில்வே நிர்வாகம் அதிக முக்கியத்துவம் தருகிறது.
இதன்படி, நம் தமிழ்நாட்டிற்கு மேலும் சில வந்தே பாரத் இரயில் சேவைகள் அடுத்த ஒரு வருடத்தில் வரலாம். ஏற்கனவே, சென்னையில் இருந்து பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் நெல்லை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களுக்கு வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில், நாகர்கோவில் உள்ளிட்ட மற்ற முக்கிய நகரங்களுக்கும் சென்னையில் இருந்து வந்தே பாரத் இரயில் சேவை துவங்கப்படலாம்.
அதேநேரம், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு மேலும் ஒரு வந்தே பாரத் இரயில் இயக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் முதல் அம்ரித் பாரத் இரயில் சேவையும் அடுத்த ஒரு வருடத்திற்குள் துவங்கப்படலாம். வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் குறைந்த விலையில் டிக்கெட் கட்டணத்தை கொண்டதாக, ஏசி இல்லாத அதிவிரைவு இரயிலாக அம்ரித் பாரத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதலால், அடுத்த 1 வருடத்தில் வந்தே பாரத் இரயில்களை காட்டிலும் அம்ரித் பாரத் இரயில்களை நாடு முழுவதும் நிறைய பகுதிகளில் இந்தியன் இரயில்வே கொண்டுவரும் என எதிர்பார்க்கிறோம். அந்த வகையில், நம் தமிழ்நாடும் சில அம்ரித் பாரத் இரயில் சேவைகளை பெறலாம். நடைபெறும் 2023-24ஆம் நிதியாண்டிற்காக கடந்த ஆண்டில் மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்தியன் இரயில்வே அமைச்சகத்துக்கு ரூ.2.40 லட்ச கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.