வங்கி கணக்கில் இருக்கும் பணம் பாதுகாப்பா இருக்கா..?யார் கேரண்டி கொடுக்கிறாங்க தெரியுமா?
இந்தியாவில் கிட்டதட்ட வங்கி கணக்கு இல்லாதவர்களே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. சேமிப்பு கணக்கு, சம்பளக் கணக்கு, ஜன் தன் யோஜனா கணக்கு என வங்கி கணக்கில் பணத்தை வைத்து கொண்டு தான் நாம் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறோம்.
குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கி கணக்குகளில் பணம் இருப்பது அவசியம். ஒரு வேளை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் மூடப்பட்டாலோ அல்லது அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டாலோ உங்கள் பணம் என்ன ஆகும் ? அதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நமது பணத்தை யார் பாதுகாப்பது?: DICGC எனப்படும் வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழகம் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமாகும். இதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளில் இருக்கும் வைப்புகளுக்கு இது காப்பீட்டை வழங்குகிறது.
1960ஆம் ஆண்டு லட்சுமி வங்கி (Laxmi Bank) திவாலானது மற்றும் பாலை மத்திய வங்கி (Palai Central Bank) மூடப்பட்டதை அடுத்து வைப்புத்தொகை காப்பீட்டு கழகம் அறிமுகம் செய்யப்பட்டது என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
வைப்புத்தொகை காப்பீட்டு கழக மசோதா 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21இல் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, 1961ஆம் ஆண்டு டிசம்பர் 7இல் நடைமுறைக்கு வந்தது.
எந்தெந்த வங்கிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன?: இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், வட்டார வங்கிகள் மற்றும் பிராந்திய கிராம வங்கிகள் ஆகியவை DICGC ஆல் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.
மாநிலங்களிலும் மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும் செயல்படும் அனைத்து மாநில, மத்திய மற்றும் முதன்மை கூட்டுறவு வங்கிகள் காப்பீட்டு பட்டியலில் உள்ளன. தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகள் DICGC ஆல் காப்பீடு செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
DICGC எதை காப்பீடு செய்கிறது?: ஒரு வங்கி தோல்வியுறும்போது அந்த வங்கியில் உள்ள வைப்புத்தொகைகளுக்கு DICGC காப்பீடு தருகிறது. சேமிப்பு கணக்கு, நிரந்தர கணக்கு, தொடர் மற்றும் நிலையான வைப்புத்தொகை என அனைத்து கணக்குகளையும் DICGC காப்பீடு செய்கிறது.
வைப்புத்தொகை கணக்கு மற்றும் சேமிப்பு கணக்குகளுக்கு அசல் மட்டும் வட்டியை சேர்த்து ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. ஒரு வங்கியின் உரிமம் நீக்கப்படுவது, கலைக்கப்படுவது, வங்கிகள் இணைப்பு ஆகிய சூழல்களில் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த காப்பீட்டினை பெற தகுதி பெறுகின்றனர்.
ஒரு வங்கி திவாலாகும்போது கலைப்பு அதிகாரி மூலமாக ஒவ்வொரு வைப்புதாரருக்கும் DICGC காப்பீட்டினை கொடுக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. கலைப்பு அதிகாரி கேட்போர் பட்டியலை கொடுத்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பணம் கொடுத்தாக வேண்டும். ஒரே நபர் பல வங்கிகளில் கணக்கு வைத்திருந்தாலும், அத்தனை கணக்குகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும்.
எனவே நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியானது DICGC இன் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை இணையதளத்திற்கு சென்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் வங்கி மூடப்பட்டாலோ அல்லது திவால் ஆனாலோ உங்களுக்கு காப்பீடு தொகையாவது கிடைக்கும்.