மாணவர்களின் மன அழுத்தம்தான் தற்கொலை எண்ணத்திற்கு காரணமா..? ஆய்வில் வெளியான உண்மை..!
அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கல்லூரி மாணவர்களிடம் காணப்படும் மன அழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை கண்டறிய சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதற்கு முன்பு நடத்திய ஆய்வுகளில் இந்திய இளைஞர்கள் மத்தியில் மன அழுத்த விகிதம் மிக அதிகமாக இருப்பதாக தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எண்ணம் என்றால் என்ன?
தனது வாழ்க்கையை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்வதையே தற்கொலை எண்ணம் எனக் கூறுகிறோம். ஒருவர் தன்னுடைய வாழ்வை முடித்துக்கொள்ள பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில நமக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் காரணங்களை வெளிப்படுத்தாமல் கூட தங்கள் வாழ்க்கை முடித்துக் கொள்கிறார்கள்.
இன்று பெரும்பாலான மாணவர்களிடத்தில் தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு மன அழுத்தம் முக்கிய காரணமாக இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக டெல்லி பகுதியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் அய்வு நடத்தப்பட்டது. இதில் 100 (50 ஆண், 50 பெண்) பேர் அறிவியல் மாணவர்கள் ஆவர். மீதமுள்ள 100 (50 ஆண், 50 பெண்) பேர் சமூக அறிவியல் மாணவர்கள்.
மாணவர்களின் மன அழுத்தத்தைக் கண்டறிய 21 கேள்விகள் நிரம்பிய பெக் மனச்சோர்வு (Beck depression) முறை பின்பற்றப்பட்டது. மாணவர்கள் அளிக்கும் பதில்கள் மூலம் அவர்களின் குணாதிசியம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் அவர்களிடம் எந்தளவிற்கு இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிவார்கள். இதுதவிர மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் எந்தளவிற்கு உள்ளது என்பதையும் ஆய்வளர்கள் மதிப்பீடு செய்தார்கள்.
மேலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவர்களிடத்தில் காணப்படும் மன அழுத்தத்திற்கும் தற்கொலை எண்ணத்திற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை கண்டறியவும் தற்கொலை எண்ணத்தின் விகிதங்களை கண்டறியவும் Pearson correlation என்ற இன்னொரு முறையும் ஆய்வில் கடைபிடிக்கப்பட்டது. இதில் அறிவியல் மாணவர்களிடத்தில் மன அழுத்தம் விகிதம் மிக அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் மற்ற வகுப்பு மாணவர்களை விட அறிவியல் பிரிவு மாணவர்கள் மிக அதிகமான தேர்வுகளை எழுத வேண்டியுள்ளதாகவும் சக மாணவர்களை விட நல்ல ரேங்க் பெற வேண்டும் என்ற போட்டி இங்கு அதிகமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொடுக்கும் அழுத்தமும் மாணவர்களின் மன நலனை பெரிதும் பாதிக்கிறது.
அறிவியல் மற்றும் சமூக அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே காணப்படும் தற்கொலை எண்ணங்களின் அளவிலும் பெரிய வித்தியாசம் இருப்பதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாணவர்களின் தற்கொலை என்ணத்தை குறைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கென்று பிரத்யேகமாக மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களின் படிப்புத் திறன் மேம்படுவதோடு கல்லூரிகளில் ஆரோக்கியமான வாழ்க்கையை வழிநடத்த முடியும் என ஆய்வாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். மாணவர்களிடம் மன அழுத்தம் அதிகரித்தால், தற்கொலை எண்ணமும் அதிகரிக்கும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்த ஆய்வு.