டி20 வரலாற்றிலேயே அதிக ரன் அடித்தும் இந்திய அணியில் இடமில்லையா? சீனியர் வீரரையே ஒதுக்கும் பிசிசிஐ
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர் விராட் கோலி. அதே போல உலகின் முன்னணி டி20 தொடரான ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்தவரும் விராட் கோலி தான். ஆனால், அவரது பேட்டிங் குறித்தே சில காலமாக குற்றச்சாட்டு ஒன்று முன் வைக்கப்படுகிறது.
2006இல் இந்திய அணி டி20 போட்டிகளில் முதன் முதலில் ஆடத் துவங்கிய போது 20 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருந்தது. அதை சேஸிங் செய்வதே மிகக் கடினமாக இருந்தது. ஆனால், இப்போது 180, 200 ரன்கள் அடிப்பது எல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. முதலில் ஆடும் அணி அப்படி பெரிய அளவில் ரன் குவித்தாலும் அடுத்து சேஸிங் செய்யும் அணி அதை எட்டி வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்றாக மாறி விட்டது. அதற்கு காரணம், பேட்ஸ்மேன்கள் மிக ஆக்ரோஷமாக ஆடத் துவங்கியது தான்.
ஆனால், விராட் கோலி இன்னும் நிதானமாக ஆடுவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசினால் விக்கெட் வீழ்ச்சியை தடுக்க வேண்டி ஒருநாள் போட்டிகளில் நிதான ஆட்டம் ஆடுவதைப் போல டி20 போட்டிகளிலும் அவர் நிதான ஆட்டம் ஆடுவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இதை அடுத்தே அவருக்கு 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் கிடைக்காது என பலரும் கூறி வருகின்றனர். விராட் கோலி 2024 ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் பாணியை மாற்றி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மூன்றாம் வரிசையில் களமிறங்க உள்ள விராட் கோலி இந்த முறை அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட முயல்வார். ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு இதுகுறித்து அவரிடம் பேசி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கோலி ஆட்டத்தில் இந்த முறை மாற்றத்தை காண முடியும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.