வீட்டுல பன்னீரும், மக்கானாவும் இருக்கா? இப்படி மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? உங்கள் வீட்டில் பன்னீரும், மக்கானாவும் உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான சுவையில் மசாலா செய்யுங்கள்.

இந்த பன்னீர் மக்கானா மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் மக்கானா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் மக்கானா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய்/நெய் – 4 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – 1/4 கப்
* வறுத்த மக்கானா – 2 கப்
* பன்னீர் – 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1/2 இன்ச்
* பூண்டு – 3 பல்
* பச்சை மிளகாய் – 1
* சீரகம் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* கசூரி மெத்தி – 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்/எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் மக்கானாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து, 4-5 நிமிடம் மொறுமொறுவென்று வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்/நெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, 1/4 கப் நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் மிளகாய் தூளை சேர்த்து மிதமான தீயில் வைத்து, சில நொடிகள் கிளறி, அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காய கலவையை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* பின் மஞ்சள் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்கி, பின் பன்னீர், மக்கானா, முந்திரி 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து 5-6 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக கரம் மசாலா, கசூரி மெத்தி, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், சுவையான பன்னீர் மக்கானா மசாலா தயார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *