டெல்லியில் இப்படியொரு இடமா.. யார் வீட்டை தட்டினாலும் பல ஆயிரம் கோடி சொத்து மதிப்பு இருக்காம்..!!
பரபரப்பான மக்களின் வாழ்க்கை, வேகமாகச் செல்லும் வாகனங்கள், எங்குத் திரும்பினாலும் கூட்ட நெரிசல் நிறைந்த டெல்லி நகரின் மத்தியில், அமைதியான, பசுமை நிறைந்த, அகலமான சாலைகள் மற்றும் பிரமாண்டமான வீடுகள் கொண்ட ஒரு பகுதி இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
இதைவிட முக்கியமாக இந்த பிரத்தியேகமான பகுதிதான் டெல்லியில் பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் முக்கியமான பகுதியாக விளங்குகிறது. டெல்லியின் முக்கிய பகுதியாக இருக்கும் லுடியன்ஸ் பகுதியில் இருக்கும் ஒவ்வொரு வீட்டின், நிலத்தின் உரிமையாளரும் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
நாட்டின் செல்வாக்குமிக்க தொழிலதிபர்களில் பலர் இங்கு வசிப்பதால், இது பலருக்கும் கனவு இடமாகப் பார்க்கப்படுகிறது.
பிரபல பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் சர் எட்வின் லுடியன்ஸ் பெயரில் அழைக்கப்படும் லுடியன்ஸ் பகுதி (Lutyens Bungalow Zone – LBZ) இந்தியாவின் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களுக்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இது இந்தியாவின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதமர்களின் இல்லங்கள் இப்பகுதியில் இருப்பது, இதன் மதிப்பைக் காட்டுகிறது.
சுமார் 230 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள லுடியன்ஸ் பகுதியில், கோல்ஃப் லிங்ர், மால்சா மார்க் மற்றும் பிருத்விராஜ் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் உள்ளன. இது டெல்லியின் ஆடம்பர சந்தையின் உச்சமாகக் கருதப்படுகிறது.
இங்கு பெரிய பெரிய பங்களாக்கள், பசுமையான காட்சிகள் மற்றும் அமைதியான சூழ்நிலை உள்ளது. லுடியன்ஸ் பகுதியைச் சுற்றிலும் விமான நிலையம், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் பிரத்தியேகமான கிளப்கள் ஆகியவற்றின் மூலம் இப்பகுதி கூடுதல் சிறப்பு பெருகிறது.
லுடியன்ஸ் பகுதியில் இருக்கும் முக்கிய நபர்களில் சிலர், பார்த் ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் மிட்டல், Dabur குழுமத்தின் பர்மன் குடும்பம் மற்றும் ஸ்டீல் தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் போன்ற பிரபல தொழிலதிபர்கள் அடங்குவர்.
லுடியன்ஸ் பங்களா மண்டலத்தில் (LBZ) வெறும் 950 பங்களாக்கள் மட்டுமே உள்ளன, ஒவ்வொரு சொத்தும் குறிப்பிடத்தக்க மதிப்பைக் கொண்டுள்ளது, இந்த குடியிருப்பதற்கான செலவும் அதிகம், லுடியன்ஸ் பகுதியில் வீடுகளுக்கான வாடகை விலை மாதம் ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும்.
ரியல் எஸ்டேட் நிபுணர்களின் கூற்றுப்படி, லுடியன்ஸ் பகுதியில் உள்ள பங்களாக்கள் ரூ.9 கோடி முதல் சுமார் ரூ.600 கோடி வரை வாங்க மதிப்புள்ளதாக இருக்கும். இந்த பகுதியில் உள்ள ஒரு சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பு கூட சுமார் ரூ.9 கோடிக்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது.