குஜராத்தில் இதெல்லாம் நடக்குதா? மகன் திருமணத்திற்கு மத்தியில், அம்பானி குடும்பம் கட்டும் 14 கோவில்!
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி குடும்பத்தின் பூர்வீகமான குஜராத் மாநிலத்தில், முக்கிய வர்த்தகம், பரம்பரை வீடு, குடும்ப சொத்துக்கள் என அனைத்தும் உள்ளது. இதிலும் குறிப்பாக ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேர் ஜாம்நகரில் உள்ளது.
இந்த ஜாம்நகரில் தான் மாபெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போதும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கிரீன் எனர்ஜி பார்க், பல நூறு ஏக்கர் மாந்தோப்பு அனைத்தும் உள்ளது. இந்த நிலையில் ஜாம்நகருக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு ஆன்மீக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவின் செழிப்பான கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் ஒரு பிரமாண்ட கோவில் வளாகம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகரில் அதன் கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளது.
இந்தியாவில் ராமர் கோவில், அமெரிக்காவில் BAPS கோவில் ஆகியவற்றுக்கு பின்பு அம்பானி குடும்பத்தின் இந்த மெகா கோவில் கட்டும் திட்டம் குறித்த செய்து டிரெண்டாகியுள்ளது. அம்பானியின் மும்பை வீடு, லண்டன் வீடு, அமெரிக்க வீடு, துபாய் என அனைத்திலும் வீட்டின் பெரும் பகுதி பூஜை அறைக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மும்பை மற்றும் லண்டன் வீட்டில் மினி கோவிலே இருக்கிறது, ஒவ்வொரு முக்கியமான பண்டிகைக்கும் தடல் புடலான ஏற்பாடுகள் உடன் கொண்டாடப்படும். இதன் நீட்சியாகக் குஜராத்தில் அம்பானி குடும்பத்தின் கோட்டையான ஜாம்நகரில் மிகப்பெரிய கோவில் வளாகம் அமைத்து அதில் 14 கோவில்கள் கட்டப்பட உள்ளது.
நீதா அம்பானி அவர்களால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது, தற்போதைய திட்டத்தின் படி சுமார் 14 புதிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோவிலும் மேம்பட்ட சிறப்பான கலை வேலைப்பாடுகள், தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் கலை பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனின் நிறுவனர் மற்றும் தலைவர் நீதா அம்பானி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், உள்ளூர் கைவினைஞர்கள் மற்றும் சிற்ப கலைஞர்களின் அபார திறமைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கைவினைஞர்கள் இந்த கோவில்களின் அழகை மேம்படுத்தப் பல பழைய கைத்தொழில்களை மற்றும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு நுணுக்கமும் இந்தியாவின் கடந்த காலத்தின் ஆன்மீக சாரத்தையும் கட்டிடக்கலை கம்பீரத்தையும் பிரதிபலிக்கிறது.
கோவில் வளாகத்திற்குச் சமீபத்தில் சென்ற நீதா அம்பானி, கைவினைஞர்களின் வேலையைப் பாராட்டியும், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்களுடன் கனிவாக உரையாடினார் இந்த வீடியோ தான். இந்த வீடியோவை நீதா முகேஷ் அம்பானி கல்சுரல் சென்டர் டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் விரேன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அனைத்தும் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற உள்ளன. ஹாலிவுட் பாப் ஐகான் ரியானா, தில்ஜித் தோசஞ்ச் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.