”கனா” படத்துல நடிச்ச பெண்ணா இது.. கடைசி பந்தில் மிரட்டல் சிக்ஸ்.. அறிமுக போட்டியில் அசத்திய சஜனா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்த சஜீவன் சஜனா, தமிழில் வெளியான கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தவர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியே அட்டாகசமாய் நடைபெற்றுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. டெல்லி அணி தரப்பில் கேப்ஸி 75 ரன்களும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 42 ரன்களும் விளாசினர். இதையடுத்து 172 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
இதில் 19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஹர்பன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் மும்பை அணி வெற்றிபெற 5 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்போது மும்பை அணி தரப்பில் அறிமுக வீராங்கனையான சஜீவன் சஜனா களமிறங்கினார். கேரளாவை சேர்ந்த வீராங்கனையான இவர் கடைசி பந்தில் எனன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பதற்றத்தில் எல்லைக்கே சென்றனர். இருப்பினும் பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவருக்கு ஆட்டம் செல்லும் என்பதால், வர்ணனையாளர்களும் ரசிகர்ளின் பிபி-யை எகிற வைத்தனர்.
அப்போது டெல்லி அணியின் கேப்ஸி கடைசி பந்தை வீச, டவுன் தி டிராக் இறங்கி வந்து லாங் ஆன் திசையை நோக்கி தோனி ஸ்டைலில் ஒரு சிக்சரை விளாசினார். இதனை பார்த்த அத்தனை வீராங்கனைகளும் ஒரு நிமிடம் மிரண்டு போயினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றார். இந்த நிலையில் யார் இந்த சஜீவன் சஜனா என்ற ரசிகர்கள் பலரும் தேட தொடங்கினர். இவர் தமிழ் சினிமாவில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளி வந்த கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தவர்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பர்களில் ஒருவராக வரும் இவர், சிவகார்த்திகேயனுடன் சில காட்சிகளில் தோன்றுவார். இதன்பின் சஜீவன் சஜனாவின் புகைப்படங்களைல் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியிலேயே சஜனா வெளுத்து கட்டியுள்ளதால், பலரும் இது மிகச்சிறந்த விளம்பரமாக அமைந்துள்ளதாக சஜனாவஒ பாராட்டி வருகின்றனர்.