10 வருட கேப்டனுக்கு இதுதான் நீங்க கொடுக்கும் மரியாதையா? தோனி விலகல்.. சின்னாபின்னமான அந்த ஐபிஎல் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருக்கிறார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த மாற்றம் மிகவும் சுமூகமாக நடைபெற்று இருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டனை மாற்றிய விதத்தையும், சிஎஸ்கே அணியின் கேப்டன்சி மாற்றத்தையும் ஒப்பிட்டு பலரும் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் தோனி சுமார் 14 ஆண்டு காலம் கேப்டனாக இருந்தார். இடையே ஜடேஜா மற்றும் சுரேஷ் ரெய்னா மொத்தமாக 14 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரியான கேப்டனை தேர்வு செய்யும் பொறுப்பை தோனியிடமே அளித்தது சிஎஸ்கே நிர்வாகம்.

இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டை அடுத்த கேப்டனாக நியமித்து இருக்கிறார் . இந்த அறிவிப்பை சிஎஸ்கே அணி வெளியிட்ட போது கூட, “தோனி தனது கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் ஒப்படைத்து இருக்கிறார்” என்று தான் கூறி இருந்தது.

தங்கள் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் பெற்றுக் கொடுத்த கேப்டன் பதவி விலகும் போது, அந்த அணி நிர்வாகம் அளிக்கும் அதிகபட்ச மரியாதையாக இது பார்க்கப்படுகிறது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன்சி மாற்றம் இப்படி மரியாதையுடன் நடக்கவில்லை என்பதே உண்மை. அந்த காரணத்தால் தான் அந்த அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, தங்கள் அணியை விட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன் குஜராத் அணியின் கேப்டனாக சென்ற ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்கு அழைத்து வந்து கேப்டன் பதவியை அளித்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அப்போது சிஎஸ்கே அணியைப் போல ரோஹித் சர்மா தனது கேப்டன் பதவியை ஹர்திக் பாண்டியா வசம் ஒப்படைத்தார் என கூறவில்லை. அற்றன் பின்னணியில் ரோஹித் சர்மாவின் அதிருப்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தங்கள் அணிக்கு ஐந்து கோப்பைகள் வென்று கொடுத்த தோனிக்கு சிஎஸ்கே அணி மரியாதை அளித்தது. அவரையே அடுத்த கேப்டனை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அவர் ஜடேஜாவை முதலில் தேர்வு செய்து அந்த முயற்சி தோல்வியில் முடிந்த போதும், மனம் தளராமல் மீண்டும் அடுத்த முறையும் அவர் வசமே முடிவை ஒப்படைத்த சிஎஸ்கே நிர்வாகம் இப்போது தோனியின் தேர்வான ருதுராஜ் கெய்க்வாட்டை அணியின் கேப்டனாக நியமித்து இருக்கிறது. இதே மரியாதையை ரோஹித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அளிக்கவில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *