TCS திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா.. பேசாம ஆபீஸ் போவது தான் பெட்டர் போல!
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் தனது ஊழியர்களுக்கு வழங்கிய ஒர்க் ப்ரம் ஹோம் வசதியை ரத்து செய்து அலுவலகத்துக்கு வந்து வேலை செய்வதற்கு மூன்று மாத அவகாசத்தைத் தந்துள்ளது.
இந்தக் கெடு மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்தே தங்களது பணியை ஆற்ற முடியும்.
இந்த உத்தரவை மீறினால் ஊழியர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலைமை இயக்க அதிகாரி என்.ஜி.சுப்பிரமணியம் எச்சரித்துள்ளார். ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு அழைத்து வருவது தொழில்துறை அளவிலான போராட்டமாக மாறியுள்ள நிலையில் இது வெளிவந்துள்ளது.
டிசிஎஸ்ஸில் இப்போது வேலை பார்ப்பவர்கள் தங்கள் அலுவலக வளாகங்களுக்கு வந்து வேலை பார்ப்பதில் சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனிடையே பல நிறுவனங்கள் பணியிடத்தில் மூன்று நாட்கள் வரை வேலைபார்ப்பதை கட்டாயப்படுத்தும் ரோஸ்டர் முறையை உருவாக்கியுள்ளன.
வீட்டிலிருந்து வேலை செய்வது ஊழியர்களையும் முதலாளிகளையும் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக ஆக்குகிறது. நாங்கள் பொறுமையுடன் செயல்படுகிறோம். ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது தொடர்பான இறுதித் தகவல் பரிமாற்றத்தை ஊழியர்களுக்கு அனுப்பியுள்ளோம், அவ்வாறு செய்யாவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
சைபர் தாக்குதல்களால், வணிகங்கள் ஆபத்தில் உள்ளன. வீட்டு அமைப்பில் அந்த ஆபத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை, எனவே வணிகத்தைப் பாதுகாப்பதற்கு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
40000 பணியாளர்கள் ஆன்லைனில் வேலைக்குச் சேர்ந்தனர். அதேபோல் ஆன்லைனில் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். இதனால் அவர்களுடன் ஆப்லைனில், அதாவது, அலுவலகத்தில் நேரிடையாக அறிமுகமாகிக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
எனவே நிறுவனத்தில் அசல் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், இந்த சூழ்நிலை நிறுவனத்துக்கு உதவாது. தொலைதூர வேலை எந்த நிறுவனத்துக்கும் ஒரு சிறந்த பணி கலாசாரத்தை உருவாக்க உதவாது என்று கூறினார்.
நேருக்கு நேர் தொடர்புகொள்வதன் முக்கியத்துவத்தை சுப்பிரமணியம் அடிக்கோடிட்டுக் காட்டுகையில், தலைமைத்துவ அழைப்புகளை மேற்கொள்வதற்கு, நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே ஒரு நிறுவனத்தால் திறமையான குழுவை உருவாக்க முடியும் என்றார்.
தலைமை மனிதவள அதிகாரியான மிலிந்த் லக்காட், இதே கருத்தை முன்வைத்திருந்தார். அதில் அவர், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதன் இயல்பான செயல்பாட்டு முறைக்கு நிறுவனம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.