சூர்யாவின் புறநானூறு படம் தள்ளிப் போனதற்கு இதுதான் காரணம்?

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் 2020 ல் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், சிறந்த கமர்ஷியல் பயோபிக்குக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடியில் வெளியானது, ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், படத்தை பல லட்சம் பேர் ஓடிடியில் கண்டுகளித்தனர். 2023 அக்டோபரில், சுதா கொங்கரா – சூர்யா கூட்டணி புறநானூறு படத்தில் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த போது, ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். புறநானூறு படம், 1960 காலகட்டங்களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. 2024 மார்ச் 27 ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 18 ம் தேதி, படப்பிடிப்பை தள்ளி வைப்பதாக சூர்யா, சுதா கொங்கரா கூட்டாக அறிவித்தனர்.
படம் கைவிடப்பட்டதாகவும், கைவிடப்படவில்லைதள்ளிதான் வைக்கப்பட்டுள்ளது என இருவேறு கருத்துக்கள் மீடியாவில் பகிரப்பட்டது. ஆனால், உண்மையான காரணம் என்ன?
புறநானூறு படத்தின் பெரும்பாலான காட்சிகள் கல்லூரியில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது. கல்லூரி விடுமுறையில் இந்தக் காட்சிகளை படமாக்கலாம் என திட்டமிட்டு, மார்ச் 27 ல் படப்பிடிப்பை தொடங்க தீர்மானித்திருந்தனர். ஏப்ரல் மாதம் முழுவதும் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிடலாம் என்பது அவர்கள் எண்ணம்.
ஆனால், பாராளுமன்ற தேர்தல் நடக்கயிருப்பதால், நினைத்தபடி ஏப்ரலில் படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை. தேர்தல் முடிந்த பின் படப்பிடிப்பை தொடங்கலாம் என்றால், சூர்யாவின் இந்திப் படம் கர்ணாவுக்கு கொடுத்த கால்ஷீட்டுடன் கிளாஸ் ஆகும். இந்த காரணங்களால் புறநானூறு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளனர், ஆனால், படம் கைவிடப்படவில்லை என்கிறார்கள்.
சூர்யா, சுதா கொங்கரா இருவருமே டிமாண்ட் உள்ள திரைபிரபலங்கள். புறநானூறு டேக்ஆஃப் ஆக காலமும், நேரமும் கூடி வரவேண்டும். அது எப்போது என்பதுதான கேள்விக்குறி.