விஜய், வெங்கட்பிரபு இணையும் படம் ஹாலிவுட் படத்தின் தழுவலா?
ஒரு படம் பூஜை போட்டதும், இது எந்த வெளிநாட்டுப் படத்தின் தழுவலாக இருக்கும் என ரசிகர்கள் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பிற படங்களின் இன்ஸ்பிரேஷன் இல்லாமல் தமிழில் படம் எடுப்பது அரிதாகிவிட்டது. அதுவும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றால் இயக்குநர்கள் ஒரு பாதுகாப்பிற்கு ஹாலிவுட் படங்களின் நிழலில் ஒதுங்கிவிடுகிறார்கள்.
விஜய்யின் கடைசிப் படம் லியோ ஹாலிவுட்டில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸை தழுவி எடுக்கப்பட்டது. லியோவை இயக்கிய லோகேஷ் கனகராஜின் விக்ரம் படமும்கூட, பெட்டர் கால் சவுல் இணையத் தொடரில் வரும் மைக் என்ற கதாபாத்திரத்தின் கதையையொட்டி எடுக்கப்பட்டதே.
மகன் கொலை செய்யப்படுவது, கொலையாளிகளை கண்டுபிடிக்க தந்தை குடிகாரராக நடிப்பது, மகனின் மனைவி, மகளை தேடி வருவது என்று விக்ரமின் கோட்டுச்சித்திரம் அப்படியே மைக்கின் கதையுடன் பொருந்தி போகும். இணையத் தொடர்களின் ராஜாவாக திகழும், பிரேக்கிங் பேட் தொடரின் முன்கதையாக பெட்டர் கால் சவுல் எடுக்கப்பட்டது. பிரேக்கிங் பேட் இணையத் தொடரிலும் மைக் கதாபாத்திரம் வரும்.
விஜய்யின் 68 வது படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். பிற படங்களின் இன்ஸ்பிரேஷனில் கதை, திரைக்கதை அமைப்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறவர் வெங்கட்பிரபு. அவர் விஜய் படத்தை 2019 இல் வெளியான ஜெமினி மேன் ஹாலிவுட் படத்தை தழுவி எடுப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதில் வில் ஸ்மித் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். அதில் வயதான ஸ்னைப்பர் வேடமும், அவரது குளோனிங்காக வரும் இளவயது வில் ஸ்மித் கதாபாத்திரமும் முக்கியமானது. இந்தக் கதையின் இன்ஸ்பிரேஷனில் விஜய்க்கும், தமிழுக்கும் ஏற்றபடி விஜய் 68 வது படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருவதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.