லண்டனில் பிறந்த விராட் கோலி குழந்தை பிரிட்டிஷ் குடிமகனா? வெளியான தகவல்.. உண்மை என்ன?
விராட் கோலிக்கு கடந்த பிப்ரவரி 15 அன்று லண்டனில் இரண்டாவது குழந்தை பிறந்தது. இரவு அது குறித்த அறிவிப்பை விராட் கோலி வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், லண்டனில் குழந்தை பிறந்ததால் அந்த குழந்தைக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கும் எனவும், தன் மகனை விராட் கோலி பிரிட்டிஷ் குடிமகனாக ஆக்கி இருக்கிறார் எனவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் வலம் வரத் துவங்கின. அது உண்மையா?
நிச்சயமாக அது உண்மை இல்லை. பிரிட்டன் நாட்டில் ஒரு குழந்தை பிறந்தால் மட்டுமே அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்து விடாது என்பதே உண்மை. பிரிட்டன் நாட்டின் விதிப்படி ஒரு குழந்தையின் பெற்றோரில் ஒருவராவது பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருக்க வேண்டும். அப்படி இருவருமே வேறு நாட்டின் குடியுரிமை கொண்டவர்கள் என்றால் அவர்கள் நீண்ட காலம் பிரிட்டனில் வாழ்ந்து குடியுரிமை பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அங்கு பிறக்கும் குழந்தைக்கு பிரிட்டன் குடியுரிமை கிடைக்கும்.
விராட் கோலி, அனுஷ்கா சர்மா லண்டனில் ஒரு வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். அதனால் மட்டுமே அவர்கள் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்களாக ஆகி விட முடியாது. எனவே, விராட் கோலியின் இரண்டாவது குழந்தை இந்திய குடிமகனாகவே பிறப்புச் சான்று பெற முடியும். ஆனால், பிரிட்டன் நாட்டில் பிறந்ததால் விராட் கோலியின் இரண்டாவது குழந்தைக்கு அந்த நாட்டின் பாஸ்போர்ட் கிடைக்கும். அதிலும் கூட இந்திய குடிமகன் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் சிலர் விராட் கோலி இந்தியாவே வேண்டாம் என முடிவு செய்து இங்கிலாந்து சென்று விட்டார் என்றும், அங்கேயே வீடு வாங்கி, தன் குழந்தைக்கும் அந்த நாட்டின் குடியுரிமை பெற்று விட்டார் என்றும் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்.
விராட் கோலியின் முதல் குழந்தை மும்பையில் பிறந்தது. அப்போது அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து விலகி மும்பை சென்றார். அதே போல தற்போது தன் இரண்டாவது குழந்தை பிறப்பின் போது அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகியதோடு, லண்டன் சென்று அங்கு தன் மனைவியோடு தங்கி இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டியிலாவது கோலி பங்கேற்பாரா? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.