வைட்டமின் டி ஊசி போடுவது நல்லதா..? கெட்டதா..? – யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம்?

எலும்புகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவைப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை, வைட்டமின் டி உதவியுடன் உடல் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும் வீக்கத்தை ஒழுங்குப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதிலும், பல நாள்பட்ட நோய்கள் தாக்காமல் பாதுகாப்பதிலும் வைட்டமின் டி உதவுகிறது. ஆனால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி-யை எப்படி பெறுவது? வைட்டமின் டி ஊசி போடுவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

வைட்டமின் டி-யை எப்படி பெறுவது?

வைட்டமின் டி-யின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளி. சூரியனில் உள்ள புற ஊதா கதிர்கள் நமது உடலில் படும்போது, சருமத்தில் உள்ள கொலஸ்ட்ரால் வைட்டமின் டி-யை உருவாக்குகிறது. எனினும், பகல் நேரம், பருவம், நீங்கள் வசிக்கும் பகுதி போன்றவை உங்கள் சருமம் எந்தளவிற்கு வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது என்பதில் மிகப்பெரிய தாக்கம் செலுத்துகின்றன.

வைட்டமின் டி தேவைகள் மற்றும் உணவுகள் :

பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 600IU அளவு வைட்டமின் டி தேவைப்படும். 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 800IU தேவைப்படும். ஆனால் சில நிபுணர்களோ பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,500–2,000 IU தேவைப்படும் எனக் கூறுகிறார்கள்.

சூரிய ஒளி தவிர, சில குறிபிட்ட உணவுகள் மற்றும் மருந்துகள் மூலமாகவும் வைட்டமின் டி-யை பெறலாம். கொழுப்பு நிறைந்த மீன்கள், முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், காளான், பால், சீஸ், யோகர்ட், ஆரஞ்சு ஜூஸ், பருப்புகள் போன்றவற்றில் இயற்கையாகவே வைட்டமின் டி உள்ளது. இதுதவிர மருந்துகள் என்று எடுத்துக்கொண்டால் மாத்திரை, திரவங்கள், ஊசிகள் போன்றவை மூலமும் வைட்டமின் டி கிடைக்கிறது.

வைட்டமின் டி ஊசிகள் என்றால் என்ன?

தீவிர வைட்டமின் டி குறைபாடு உடையவர்கள் அல்லது செரிமானப் பிரச்னை இருப்பவர்கள் அல்லது உணவில் இருந்து போதுமான ஊட்டசத்து கிடைக்கப் பெறாதவர்கள் ஆகியோர்களுக்கு இந்த வைட்டமின் டி ஊசி பரிந்துரைக்கப்படுகிறது. இந்த ஊசியின் மூலம் வைட்டமின் டி நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. வைட்டமின் டி பற்றாக்குறையை பொறுத்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த ஊசி செலுத்தப்படும். சூரிய ஒளியிலிருந்து நமது சருமம் உற்பத்தி செய்யும் வைட்டமின் டி3 தான் இந்த ஊசியிலும் பயன்படுத்தப்படுகிறது.

வைட்டமின் டி ஊசி போடுவதால் கிடைக்கும் பயன்கள்:

1. எலும்பின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தி எலும்புப்புரை மற்றும் எலும்புருக்கி நோய் ஏற்படாமல் காக்கிறது.

2. வயதானவர்கள் கீழே விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படாமல் தடுக்கிறது.

3. தசைகள் வலுவடைகின்றன.

4. நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படுவது குறைகிறது.

5. மன அழுத்தத்தை குறைக்கிறது. மனநலனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

6. டயாபடீஸ், இதய நோய்கள் மற்றும் சில குறிப்பிட்ட புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வைட்டமின் டி ஊசி போடுவதால் ஆபத்து ஏதும் வருமா?

வைட்டமின் டி ஊசி போடுவது முற்றிலும் பாதுகாப்பானது என்றாலும் இதனால் சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக,

1. ஊசி போட்ட இடங்களில் வலி, வீக்கம் அல்லது ரத்தம் கசிதல் ஏற்படும்.

2. அரிப்பு, எரிச்சல், அல்லது மூச்சுவிடுவதில் சிரமம்.

3. காய்ச்சல், நடுக்கம் போன்றவை ஏற்படக்கூடும்.

4. ரத்தத்தில் கல்சியம் அளவு அதிகரித்து ஹைபர்கால்சீமியா உண்டாகும். இதன் காரணமாக இதய பிரச்னைகள், சிறுநீரகத்தில் கற்கள், குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், குழப்பம் போன்றவை ஏற்படக்கூடும்.

மருந்தை வாய்வழியாக செலுத்துவது நல்லதா அல்லது ஊசி மூலம் செலுத்துவது நல்லதா?

உடலில் வைட்டமின் டி அளவை அதிகரிக்க, ஊசி மூலமாகவோ அல்லது மருந்து மாத்திரையாகவோ வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை இரண்டுக்குமே வேறு வேறு சாதக, பாதங்கள் உள்ளது.

வைட்டமின் டி பற்றாக்குறை அதிகமாக இருந்தால் அல்லது உணவு மற்றும் மாத்திரை மூலமாக வைட்டமின் டி கிடைக்க முடியாதவர்களுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்துவது நல்லது.

வயதானவர்களுக்கு மாத்திரை அல்லது திரவமாக இருந்தால் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள மறந்துவிடுவார்கள். அவர்களுக்கு ஊசி செலுத்துவதே சிறந்ததாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *