பாஜகவில் இணைகிறாரா யுவராஜ் சிங்? லோக்சபா தேர்தலில் போட்டி? மத்திய அமைச்சரை சந்தித்ததன் பின்னணி!

இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மை காலங்களில் பாஜகவில் விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் இணைவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் தங்களது ஓய்வுக்கு பின் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே பாஜகவில் இணைந்த கவுதம் கம்பீர், டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியில் வென்று எம்பி-யாக செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி எம்பி-யாக செயல்பட்டு வருகிறார். இவர்களை தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடிய யுவராஜ் சிங். 40 டெஸ்ட், 304 ஓடிஐ மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடி 12 ஆயிரத்திற்கும் அதிக ரன்களை விளாசியுள்ளார்.

2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர். அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், நீண்ட போராட்டத்திற்கு பின் கம்பேக் கொடுத்தார். இதன்பின் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் யுவராஜ் ஓய்வை அறிவித்தார். தொடர்ந்து கிரிக்கெட் அகாடமி மூலமாக இளம் வீரர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக யுவராஜ் சிங், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கான பின்னணி குறித்து விளக்கப்படாததால், யுவராஜ் சிங் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. அதுமட்டுமல்லாமல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தின் குர்டாஸ்பூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது குர்டாஸ்பூர் தொகுதி எம்பியாக பாஜகவை சேர்ந்த நடிகர் சன்னி டியோல் செயல்பட்டு வருகிறார். யுவராஜ் சிங் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது. யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்கிற்கு அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டி வந்தாலும், யுவராஜ் சிங் அரசியலில் ஈடுபட ஆர்வமாக இல்லை என்று கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *