“இஸ்ரேலின் நோக்கம் தோல்வியடையும்..!” – காஸா ராணுவ பிரிவு
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த இரு மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இந்நிலையில், “காஸாவில் உள்ள போராளிக் குழுவை ஒழிப்பதற்கான இஸ்ரேலின் நோக்கம் ‘தோல்வி அடையும்’ என்று ஹமாஸின் ராணுவப் பிரிவு கூறியுள்ளது.
செய்தித் தொடர்பாளர், அபு உபைதா இது குறித்து கூறுகையில், “காஸாவில் உள்ள பிணைக்கைதிகளை வெளியிடுவது ‘இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நிறுத்தத்தை’ சார்ந்துள்ளது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் அல்லது ராணுவ நடவடிக்கைகள், கைதிகளை வீட்டிற்கு கொண்டு வராது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதைத் தவிர கைதிகளை உயிருடன் விடுவிக்க வேறு வழியில்லை” என்றார். இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, காஸாவில் 129 பிணைக்கைதிகள் உள்ளனர்.
காஸா மீது தரை வழி தாக்குதல்:
தொடர்ந்து அபு உபைதா கூறுகையில், “பேச்சுவார்த்தைக்கு மாற்று எதுவும் இல்லை. இஸ்ரேலிய துப்பாக்கிச் சூடு பிணைக்கைதிகளின் மரணத்திற்கு வழிவகுக்கும். இஸ்ரேல் பிரதமரின் முடிவு எதிர்கொள்வதையும் உண்மையை அங்கீகரிப்பதையும் தவிர்க்கிறது” என்றார்.
செய்தித் தொடர்பாளரின் பதிவுக்குப் பிறகு, ஹமாஸின் ஆயுதப் பிரிவு மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைக் காட்டும் வீடியோவையும் வெளியிட்டது. அவர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறினர்.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில் AFP கணக்கின்படி, அக்டோபர் 7 -ம் தேதி அன்று ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கியதில் இருந்து காஸா போர் தொடங்கியது. காஸாவின் ஹமாஸ் அரசாங்கத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தரைவழி ஆக்கிரமிப்பில், சுமார் 20,000 பேர் உயிரிழந்தனர், இதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள். இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 240 பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக விடுவிக்கப்பட்ட 80 இஸ்ரேலியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள், கடந்த மாதம் ஏற்பட்ட போர்நிறுத்தம் மூலம் விடுவிக்கப்பட்டனர்.