செலவு ரொம்ப ஆகாது!! ரூ.7 லட்சத்திற்குள் தான் விலையே… நீங்களும் ஆட்டோமேட்டிக் காருக்கு ஓனர் ஆகலாம்!
ஒரு சமயத்தில் ஆட்டோமேட்டிக் கார்கள் விலைமிக்கவை ஆகவும், நிறைய பேரால் வாங்க முடியாதவைகளாகவும் இருந்தன.
ஆனால், இப்போது எல்லாமே மாறிவிட்டது. மிகவும் விலை குறைவான கார்களில் கூட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. அவ்வாறு, ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சத்திற்குள் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கிடைக்கக்கூடிய கார்களை இங்கே பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): இந்தியாவில் இந்த 2023ஆம் வருடத்தில் விற்பனை நிறுத்தப்பட்ட கார்களுள் ஒன்றாக ஆல்டோ உள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் கூறியிருந்தோம். ஆனால், 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும் ஆல்டோ கே10 இன்னும் விற்பனையில் உள்ளது.
ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.61 லட்சம் மற்றும் ரூ.5.90 லட்சம் ஆகும். இதில் ரூ.5.61 லட்சத்தில் வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டிலும், ரூ.5.90 லட்சத்தில் வி.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டிலும் ஆல்டோ கே10 கிடைக்கும். குறைந்த பராமரிப்பு செலவின் காரணமாக, ஆல்டோ கார்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவைகளாக உள்ளன.
ரெனால்ட் க்விட் (Renault Kwid): இந்தியாவில் மிக குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய கார்களுள் ஒன்று. மாருதி ஆல்டோ காரை போன்று க்விட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்கள் ரூ.5 – 7 இலட்சத்தில் கிடைக்கின்றன. ஆர்.எக்ஸ்.டி, க்ளிம்பர் மற்றும் அர்பன் நைட் எடிசன் என்கிற 3 வேரியண்ட்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் க்விட் கிடைக்கிறது.
இதில் ஆர்.எக்ஸ்.டி வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.12 லட்சம், மற்ற இரண்டின் விலைகள் முறையே ரூ.6.33 லட்சம் மற்றும் ரூ.6.39 லட்சம் ஆகும். இந்த 3 வேரியண்ட்களிலும் 999சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. மறுவிற்பனையின் போது, மாருதி கார்கள் அளவிற்கு மதிப்பை கொடுக்காது என்றாலும், ரெனால்ட் கார்கள் ஸ்டைலிஷான தோற்றம் கொண்டவை.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R): விசாலமான உட்புற கேபினுக்காக, சற்று உயரமான காரை எதிர்பார்ப்பவர்களுக்கு வேகன் ஆர் ஏற்றதாக இருக்கும். ரூ.7 இலட்சத்திற்குள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் மற்றொரு மாருதி கார். வி.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ என 2 வேரியண்ட்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டாடா டியாகோ (Tata Tiago): டாடாவில் இருந்து ரூ.7 இலட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் கிடைக்கக்கூடிய ஒரேயொரு ஆட்டோமேட்டிக் கார் டியாகோ எக்ஸ்.டி.ஏ மட்டுமே ஆகும். டாடா ஹேட்ச்பேக் காரான இதில் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்ஸ் வழங்கப்படுகின்றன.
மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio): டியாகோவை போல், செலேரியோவிலும் ஒரேயொரு வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டில் மட்டுமே ரூ.7 லட்சத்திற்குள் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் கார் கிடைக்கிறது. செலேரியோ வி.எக்ஸ்.ஐ வேரியண்ட்டின் விலை ரூ.6.38 லட்சமாக உள்ளது. 998சிசி 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் இந்த காரில் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளவை கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆதலால், ஒரு சில கார்களின் ஆன்-ரோடு விலைகள் ரூ.7 லட்சத்தை தாண்டி செல்லலாம். எனவே, இந்த கார்களின் ஆன்-ரோடு விலை குறித்து அறிய, அருகில் உள்ள டீலர்ஷிப் ஷோரூம்களை தொடர்பு கொள்ளவும். இந்த 5 ஆட்டோமேட்டிக் கார்களில் எது உங்களுக்கு பிடித்தமானது கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.