இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை : அண்ணாமலை..!

கோவை சரவணம்பட்டியில் நேற்று நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்ட த்தில் பா.ஜ.க. மாநில தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும். கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்களாகி விட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம்.

20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர். 2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன்.

கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் வாக்களிக்க நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.

இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை.

தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?இவ்வாறு அவர் கூறினார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *