வறுமை ஒழிய இன்னும் 200 ஆண்டுகளாகும்.. ஷாக் கொடுத்த புள்ளிவிவரம்!
உலகின் டாப் 5 பணக்காரர்களின் சொத்து மதிப்பானது கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. மறுபக்கம் உலகில் வசிக்கும் சுமார் 4.8 பில்லியன் மக்கள் அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 60%-க்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடி வருகின்றனர். உணவு, உடை, இருப்பிடம் அல்லது போதுமான பொருளாதாரமின்றி பல கோடிகணக்கான மக்கள் வறுமையில் வசிப்பது என்பது உலகம் முழுவதும் பொதுவாக காணப்படும் ஒரு பெரிய பிரச்சனையாகும்.
இந்த சூழலில் உலகில் வாழும் எந்தவொரு நபரும் வறுமையில் வாடவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் 229 ஆண்டுகள் ஆகும் என்று Oxfam-ன் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த தரவானது சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார மன்ற கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட Oxfam International-ஆல் வெளியிடப்பட்ட Inequality Inc. என்ற புதிய அறிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த அறிக்கையின்படி எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் வாரன் பஃபெட் உள்ளிட்ட உலகின் டாப் 5 பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கியுள்ள அதே நேரத்தில் உலகளவில் கிட்டத்தட்ட 5 பில்லியன் மக்கள் மேலும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நேரத்தில் தொடர்ந்து பெரும் பணக்காரர்களின் கைகளில் பெருநிறுவனங்களும், செல்வங்களும் குவிந்து கொண்டே செல்வது உலகளாவிய அளவில் கவலையாக இருக்கிறது. தற்போதைய இந்த ட்ரெண்ட் தொடருமானால் அடுத்த 230 ஆண்டுகளில் வறுமையை ஒழிப்பது கடினமான பணியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்காவில், டாப் 0.1% பேர் கிட்டத்தட்ட 20% ஹவுஸ்ஹோல்ட் ஷேர்களை (household shares) வைத்திருக்கிறார்கள், ஆனால் ஏழைகள் 50% பேரிடம் வெறும் 1% மட்டுமே உள்ளது.
அமெரிகாவில் மட்டுமல்ல தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளிலும இதே போன்ற ஏற்றத்தாழ்வுகள் தான் காணப்படுகின்றன. அதே போல உலகில் 1% செல்வந்தர்கள் அனைத்து உலகளாவிய நிதி சொத்துக்களில் சுமார் 43 சதவீதத்தை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள் என்பதையும் Oxfam அறிக்கையின் தரவு காட்டுகிறது. இது மட்டுமல்ல பிராந்திய ரீதியாக மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளும் கூட இதே போன்ற ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்கின்றன. இங்கு வசிக்கும் பெரும் பணக்காரர்களில் 1 சதவிகிதத்தினர் சுமார் 47% முதல் 50% வரையிலான நிதிச் செல்வத்தை வைத்திருக்கிறார்கள்.
மேலும் உலகின் 50 பெரிய பொது நிறுவனங்களில், சுமார் 34% பில்லியனராக இருக்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரியால் வழிநடத்தப்படுகின்றன அல்லது ஒரு பில்லியனரை முதன்மை பங்குதாரராகக் கொண்டிருப்பதாக Oxfam-ன் ஆராய்ச்சி வெளிப்படுத்தி உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இருந்து பணக்காரர்கள் பெறும் சீரற்ற பலன்களை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முக்கியமாக பெருநிறுவன உரிமையில் இன வேறுபாடுகள் இருப்பதும் இந்த அறிக்கையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவில், 89% பங்குகள் வெள்ளையர்களிடமும், 1.1% கறுப்பின மக்களிடமும், 0.5% ஹிஸ்பானிக் மக்களிடமும் உள்ளது.
மேலும் அமெரிக்காவில், ஒரு பொதுவான கறுப்பின குடும்பத்தின் செல்வம் ஒரு பொதுவான வெள்ளை குடும்பத்தின் செல்வத்தில் 15.8% மட்டுமே இருக்கிறது. அதே போல சர்வதேச அளவில் ஆண், பெண் என்ற பாலின இடைவெளியும் வெளிப்படையாக உள்ளது, ஏனெனில் உலகளவில் மூன்றில் ஒரு வணிகம் மட்டுமே பெண்களுக்கு சொந்தமானதாக இருக்கிறது.
உலகளாவிய அளவில் செல்வ சமத்துவமின்மை அதிகரித்து வருவதால் வறுமை நிலவுவதற்கான மூல காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கும், அனைவருக்கும் மிகவும் சமமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் தேவையான மாற்றங்களை செய்வதற்கும் இருக்கும் அவசர தேவையை Oxfam-ன் அறிக்கை நினைவூட்டுவதாக உள்ளது.