என் பேத்தியை பார்த்து 5 வருஷமாச்சு.. மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ளார் ஜடேஜா.. தந்தை குற்றச்சாட்டு!
5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பேத்தியின் முகத்தை கூட பார்க்கவில்லை என்று இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திரா ஜடேஜா மற்றும் அவரது குடும்பத்தினர் இடையில் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு ரிவாபா என்ற பெண்ணை திருமணம் செய்த ரவீந்திரா ஜடேஜா, அதன்பின் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறினார்.
இதனிடையே பாஜகவில் இணைந்த ஜடேஜாவின் மனைவி ரிவாபா, 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போது காயம் காரணமாக ஓய்வில் இருப்பதாக கூறிய ஜடேஜா, தனது மனைவி ரிவாபாவுக்காக தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் ரிவாபாவை எதிர்த்து ஜடேஜாவின் சகோதரி நய்னபா காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டார்.
இந்த போட்டியில் நய்னபாவை வீழ்த்தி 88,835 வாக்குகள் பெற்று ரிவாபா வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார். இதனால் ஜடேஜாவின் குடும்பத்திற்கு பிரிவு ஏற்பட்டதாக தகவல் வெளி வந்தது. ஆனால் தேர்தலுக்கு முன்பாகவே ரவீந்திரா ஜடேஜா அவரின் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாக அவரின் தந்தை அனிருத் சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனிருத் சிங் ஜடேஜா பேசுகையில், ஜடேஜாவை திருமணம் செய்த 3 மாதங்கள் அனைத்து சொத்துகளையும் தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று கூறினார் ரிவாபா. இதன்பின் எங்கள் குடும்பத்திற்குள் சண்டை வந்தது. அதன்பின் அவருக்கும் எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. ஜடேஜாவை நாங்கள் எதற்காகவும் அழைக்க மாட்டோம். அவரும் எங்களை அழைக்க மாட்டார்.
நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது பேத்தியை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மாமியர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டார் ரவீந்திர ஜடேஜா. அவர்கள் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவார்கள். பணத்தை கொட்டும் வங்கியை போல் ஜடேஜா இருப்பதால், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.