“இட்ஸ் நாட் ரைட் மா…” திமுக எம்எல்ஏ மருமகள் கண்ணீர் ஆடியோ!
‘ராத்திரி தூங்கி விட்டு, காலையில் எழுந்திருக்கும் போதே கலக்கத்தோட தான் எழுந்திருக்கிறேன். திமுகவினர் ஜாக்கிரதையாக இருங்க’ என்று திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பகிரங்கமாக மேடையிலேயே பேசியிருந்தார்.
தமிழகம் முழுவதும் அத்தனை சிக்கல்களில் சிக்கியும், பிரச்சனைகளை உருவாக்கியும் வருகிறார்கள் திமுகவினர். ரோட்டோர பஜ்ஜி கடையில் ஓசி பஜ்ஜி கேட்டு தகராறு செய்வதில் துவங்கி, அடுத்தவர்களின் வீட்டை, மனையை மோசடி செய்வது, போலீசாரை மிரட்டுவது, மேடைகளில் பொதுமக்கள் முன்னிலையில் ஒருமையிலும், ஆபாசமாகவும் பேசுவது, அதிகாரிகளை மரியாதைக் குறைவாக நடத்துவது என்று வாரத்திற்கொரு முறையாவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தைத் தாண்டியும் திமுகவுக்கு அவப்பெயரை தேடிக் கொடுத்திருக்கிறது. திமுக எம்எல்ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண் ரேகாவின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு. தன்னை எப்படியெல்லாம் எம்.எல்.ஏ., மருமகள் கொடுமைப்படுத்தினார் என்று அந்த பெண், கண்ணீர் மல்க கதறியபடியே பேசினார்.
திமுக எம்.எல்.ஏ. மருமகள், இளம்பெண் ரேகாவை துன்புறுத்திய சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ரேகா அடுத்தடுத்து ஆண்டோ மற்றும் மெர்லினா ஆகியோரின் மீது பல்வேறு புகார்களை கொடுத்துள்ளார். மேலும் மெர்லினா என்னென்ன கொடுமைகளை செய்துள்ளார் என்று வரிசையாக அடுக்கியுள்ளார். அதிலும் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும்,சிகரட்டை கொண்டு சூடு வைத்ததாகவும்,முடியை வெட்டி அசிங்கப்படுத்தியதாகவும், சற்று கூட ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் வேலை வாங்கியதாகவும்,வீட்டுக்குள் அடிமை போல் நடத்தியதாகவும்,ரேகா புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இருவரின் மீதும் மிரட்டுதல், காயப்படுத்துதல் போன்ற ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.