ஓ.எம்.ஆர் சாலைக்கு வந்தாச்சு விடிவுகாலம்! மேஜர் பிரச்சனைக்கு வந்தாச்சு தீர்வு! இனி சல்லுனு பறக்கலாம்
சென்னையில் இப்போது மெட்ரோ கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமானம் முடிந்தால் விரிவான ஒரு மெட்ரோ அமைப்பைக் கொண்ட நகராகச் சென்னை மாறும்.
டிராபிக் நெரிசல்
இதற்கிடையே தரமணி – சிறுசேரி சிப்காட் இடையே 20 கிமீ தூரத்திற்கு 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமானம் இப்போது படுவேகமாக நடந்து வருகிறது. இருப்பினும், இந்தக் கட்டுமானத்தால் பழைய மகாபலிபுரம் சாலை கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓஎம்ஆர் சாலை என்பது ஐடி நிறுவனங்களில் வேலை செய்வோர் அதிகம் பயன்படுத்தும் சாலையாகும். இங்கே கட்டுமானம் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக அங்கே வைக்கப்பட்டுள்ள நீல நிற பேரிகேட்களால் தான் முக்கியமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே இந்த வழித்தடத்தில் தூண்கள் மற்றும் டிராக் அமைக்கும் பணி முடியும் சீக்கிரம் முடியும் என்பதால் இன்னும் 6 மாதங்களில் ஓஎம்ஆர் சாலையில் வைக்கப்பட்டுள்ள நீல நிற தடுப்புகள் அகற்றப்படும் என தெரிகிறது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்: இந்த ரூட் வரும் 2026ஆம் ஆண்டில் தயாராகும் என தெரிகிறது. மொத்தம் 118.9 கிமீ கொண்ட இந்த மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதி 2025 இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். தொடர்ந்து இது முழுமையாகச் செயல்பாட்டிற்கு வர 2028 வரை ஆகும் எனத் தெரிகிறது. ஓ.எம்.ஆர். சாலையில் கட்டுமான பணிகள் படுவேகமாக நடந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதே வேகத்தில் கட்டுமான பணிகள் நடந்தால் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சாலையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினை சரியாகிவிடும். ஏனென்றால் பாதைகள் அமைக்கப்பட்டுவிட்டால் அதன் பிறகு ஸ்டேஷன் கட்டுமானம் பணிகள் மட்டுமே இருக்கும். அதற்காகச் சாலை முழுக்க தடுப்புகள் வைக்கத் தேவையில்லை. மேலும், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கட்டுமானம் நடக்கும் என்பதாலும் டிராபிக் நெரிசல் குறையும்.
நெரிசல் குறையும்
இது குறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறுகையில், “இந்த பகுதியில் கட்டுமானம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும், 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இங்கே கட்டுமானம் நிறைவடையும். காரிடார்-4இல் பூந்தமல்லி டிப்போவைப் பயன்படுத்துவதால், காரிடார்-5இல் ஆதம்பாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களும் அதற்குள் தயாராக இருக்க வேண்டும். இப்போது எல்லாம் பக்காவாக செல்கிறது. ஆனால், ஆதம்பாக்கத்தில் குறிப்பிட்ட பகுதி குறுகியதாக இருப்பதால் அது மட்டுமே சவால்” என்றார்.
ஓ.எம்.ஆர் சாலையில் உயர்த்தப்பட்ட பாதை என்பது தரமணியிலிருந்து தொடங்கி சிறுசேரி சிப்காட்டில் முடிவடையும். இந்தக் கட்டுமானம் தான் அங்கே போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்தி வருகிறது.
மக்கள் சொல்வது என்ன
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “தற்போது சோழிங்கநல்லூர் சிக்னலை கடப்பதே பெரும் போராட்டமாக உள்ளது. பீக் ஹவர்ஸில் அந்த ஒரு சிக்னலை கடக்கவே 20 நிமிடங்கள் ஆகும். இங்கே மாற்றுச் சாலைகளும் இல்லை. அதுதான் பிரச்சினை. துரைப்பாக்கம் சிக்னலில் செய்தது போல் போக்குவரத்தை ஏன் திருப்பி விட முடியாது? இங்கிருக்கும் மெட்ரோ கட்டுமான பேரிகார்டுகள் தான் பிரச்சினை. அது நீக்கப்பட்ட உடன் வாகனங்கள் செல்ல அதிக இடவசதி இருக்கும்” என்றார்.
இப்போது மெட்ரோ நிறுவனம் மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு கட்டமைப்புகளை உருவாக்க ஓஎம்ஆர் பகுதியில் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது. முன்னதாக, சர்வீஸ் சாலைக்கும் பிரதான சாலைக்கும் இடையே மெட்ரோ ஸ்டேஷனை உருவாக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால், சாலையின் அகலம் குறையும் என்பதால் இப்போது சர்வீஸ் லேனுக்கு வெளியே இந்த மெட்ரோ ஸ்டேஷனை அமைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.