இந்த பையனை 2 வாரமாக கண்காணிக்கிறேன்.. எந்த குறையும் பார்க்க முடியலை.. இளம் வீரர் பற்றி பீட்டர்சன்!

இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்து இங்கிலாந்து ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 322 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம் மற்றும் சுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டம் காரணமாக 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 196/2 ரன்களை குவித்துள்ளது.
சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 5 சிக்ஸ் மற்றும் 9 பவுண்டரி உட்பட 104 ரன்களை சேர்த்திருந்தார். அப்போது முதுகு பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட்டாகி பெவிலியன் திரும்பினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் அதிவேகமாக 3 சதங்களை விளாசிய சேவாக்கின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். அறிமுக டெஸ்டில் சதம், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம், தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் சதம் என்று வெவ்வேறு சூழல்களில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மட்டும் இதுவரை 435 ரன்களை விளாசியுள்ளார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் பார்த்தவரையில் இந்திய மண்ணில் ஜெய்ஸ்வாலிடம் எந்த வீக்னஸும் கிடையாது. அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், வெளிநாடுகளில் ரன்கள் சேர்ப்பது மட்டும் தான். ஒரு கிரிக்கெட் வீரரின் கடைசி காலத்தில் சிறந்த வீரர் என்று போற்றப்படுவதற்கு, அவர் அனைத்து நாடுகளிலும் ரன்களையும், சதங்களையும் விளாச வேண்டும்.
அதேபோல் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ஜெய்ஸ்வால் அருகில் இருந்து தீவிரமாக கண்காணித்து வருகிறேன். எனக்கு தெரிந்து, அவரால் அனைத்து நாடுகளில் சதங்களையும் விளாச முடியும் என்று நம்புகிறேன். நிச்சயம் ஜாம்பவான் என்ற பெயரை ஒருநாள் பெறுவார் என்று தெரிவித்துள்ளார். வழக்கமாக இந்திய வீரர்களை இங்கிலாந்து வீரர்கள் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார்கள். ஆனால் பீட்டர்சன் நேரடியாக பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.