இந்திய வீரர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அதிரடி போனஸ்.. விக்கெட் கீப்பரால் பிசிசிஐ எடுத்த முடிவு

இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது என நினைத்தால், அது தவறு. இந்த முடிவை பிசிசிஐ எடுக்க காரணமே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தான்.

2023 உலகக்கோப்பை தோல்வி, தனக்கு அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காதது போன்ற காரணங்களால் இஷான் கிஷன் மன உளைச்சல் ஏற்பட்டு இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் போது பாதியில் விலகினார். அதன் பின் இரு வாரங்கள் ஓய்வுக்கு பின் அவரை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராஃபியில் பங்கேற்குமாறு இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

ஆனால், இஷான் கிஷன் ரஞ்சி ட்ராபியில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. மாறாக 2024 ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சி மேற்கொண்டு விட்டு உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறார். அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பெறவே ஆர்வம் காட்டவில்லை என்பது பிசிசிஐ-யை யோசனையில் ஆழ்த்தி இருக்கிறது.

இப்படியே போனால் இனி பல வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து விட்டு, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். வெறும் இரண்டு மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் மட்டுமே பல கோடிகளை சம்பளமாக பெற முடியும். அதைத் தவிர்த்து வீரர்களின் முக்கியத்துவத்துக்கு ஏற்ப விளம்பர வருவாயில் பங்கும் கிடைக்கும்.

அதனால் இளம் வீரர்கள் இனி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வைக்க வேண்டும் என்றால் ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளது பிசிசிஐ. அதன்படி இனி ஒரு ஆண்டின் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இடம் பெறும் வீரர்களுக்கும் பிசிசிஐ ஊக்கத் தொகை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிசிசிஐ ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், சர்வதேச டி20 போட்டிகளுக்கு 3 லட்சமும் சம்பளம் கொடுத்து வருகிறது. இனி டெஸ்ட் போட்டிகளுக்கு 15 லட்சம் சம்பளம் போக ஆண்டின் முடிவில் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்ற வீரர்களுக்கு கூடுதல் தொகை கிடைக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *