ரிங்கு சிங்கிற்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.3 கோடி பரிசு.. காரை பரிசாக வழங்கும் இந்திய வீரர்.. யாருக்கு?
இந்திய அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் படைத்த சாதனைகளுக்காக லக்னோவை சேர்ந்த அறக்கட்டளை சார்பாக ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் வீரராக உருவாகி வருகிறார் ரிங்கு சிங். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரிங்கு சிங் வெளிப்படுத்திய ஆட்டம், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு கிட்டத்தட்ட இடத்தை உறுதி செய்துள்ளது. இதுவரை இந்திய அணிக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இதுவரை 89.00 பேட்டிங் சராசரியுடன் 389 ரன்களை விளாசியுள்ளார்.
எளிய பின்னணியை கொண்ட ரிங்கு சிங், இந்திய அணியின் உச்சத்திற்கு சென்றுள்ளது இளைஞர்கள் மத்தியில் ஊக்கத்தை அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சாதாரண பகுதியில் இருந்து முன்னேறி இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியதை பாராட்டும் வகையில் லக்னோவை சேர்ந்த இந்திரா காந்தி அறக்கட்டளை சார்பாக அவருக்கு மிகப்பெரிய பரிசுத்தொகை மற்றும் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அறக்கட்டளை சார்பாக ரூ.3 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இவர் மட்டுமல்லாமல் தடகள வீரர் குல்வீர் சிங்கிற்கும் ரூ.75 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த பரிசுத்தொகையை வைத்து ரிங்கு சிங் கார் ஒன்றினை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
அந்த காரினை வாங்கி தனது தந்தைக்கு பரிசளிக்க ரிங்கு சிங் திட்டமிட்டுள்ளார். ரிங்கு சிங்கிடம் ஏற்கனவே ஒரு கார் இருக்கும் சூழலில், தற்போது குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு கார் வாங்க முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ரிங்கு சிங் இந்திய அணிக்காக விளையாடி வரும் நிலையிலும், அவரின் தந்தை கான்சந்திர சிங் சிலிண்டர் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை தொடர்ந்து வருகிறார்.