ஜடேஜா நீங்க வேண்டாம்.. உட்காருங்க! சர்பராஸ் நீங்க போங்க.. ரோகித்தின் திடீர் முடிவு .. காரணம் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த திடீர் முடிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் நூறாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கி அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
ஜெய்ஸ்வால் 57 ரன்கள், ரோகித் சர்மா 103 ரன்கள், கில் 110 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜடேஜாவை தான் ரோகித் சர்மா களமிறக்கினார்.
இதில் ராஜ்காட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் வந்து ஜடேஜா சதம் விளாசினார். இது ரோகித் சர்மா செய்த மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்பட்டது. ரோஹித்தின் இந்த முடிவுக்கு காரணம் இடது கை பேட்ஸ்மேனும் வலது கை பேட்ஸ்மேனும் நடுவரிசையில் களமிறங்கினால் அது இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ரோகித் சர்மா இந்த முடிவை செய்தார்.
இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை ஐந்தாவது வரிசையில் களம் இறக்காமல் ரோகித் சர்மா திடீரென்று சர்பராஸ் கானை அழைத்து பேட்டிங் செய்ய அனுப்பினார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரோகித்தின் முடிவுக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.கடந்த டெஸ்ட் போட்டிகளில் எல்லாம் ரஜத் பட்டிதார் என்ற வலது கை பேட்ஸ்மேன் அல்லது கில் என்ற வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தார்கள்.
இதனால் இடது கை பேட்ஸ்மேனான ஜடேஜாவை ரோகித் பேட்டிங்கிற்கு அனுப்பினார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேனான டேவிட் படிக்கல் களத்தில் நின்றார். இதனால் மீண்டும் ஒரு இடது கை பேட்ஸ்மேனை அனுப்புவதற்கு பதிலாக வலது கை வீரரான சர்பராஸ் கானை ரோகித் சர்மா அனுப்பி இருக்கிறார்.இந்த முடிவு இந்தியாவுக்கு நல்ல பலனை கொடுத்தது. ஏனென்றால் இந்த இளம் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தது. ரோஹித் இப்படி திடீரென்று பேட்டிங் வரிசையை மாற்றியது மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது.