மானத்தை காப்பாற்றிய ஜடேஜா.. ஒரே ஓவரில் மாறிய மேட்ச்.. இங்கிலாந்து ஆல் – அவுட் ஆனது எப்படி?
நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 353 ரன்களுக்கு ஆல் – அவுட் செய்ய முக்கிய காரணமாக இருந்தார் ரவீந்திர ஜடேஜா
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது, பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 200 ரன்கள் எடுத்தாலே பெரிய ஸ்கோராக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது.
அதே போல இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. ஆனால், அதன் பின் மூத்த வீரர் ஜோ ரூட் நிதான ஆட்டம் ஆடி போட்டியை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாற்றினார். முதல் நாளின் ஆட்ட நேர முடிவில் அவர் சதம் கடந்து இருந்தார். இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்து இருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள், இங்கிலாந்து அணியின் கடைசி 3 விக்கெட்களை எளிதாக வீழ்த்தி விடுவார்கள் என எண்ணிய நிலையில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஒல்லி ராபின்சன் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒன்பதாம் வரிசை பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்து இந்திய அணியை பெரும் சிக்கலில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் 103வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா ராபின்சன் மற்றும் அவருக்கு பின் வந்த பஷீர் விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அதன் பின் வந்த ஆண்டர்சன் விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார். ஜோ ரூட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்து இருந்தார். இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது. இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். ஆகாஷ்தீப் 3, சிராஜ் 2, அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
மிகக் கடினமான ராஞ்சி பிட்ச்சில் இங்கிலாந்து அணி 400 ரன்கள் எடுத்திருந்தால் அது சொந்த மண்ணில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்திருக்கும். அந்த வகையில் இந்திய அணியின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார் ஜடேஜா.