இனி லிவ்-இன் உறவை பதிவு செய்ய தவறினால் சிறை..!

உத்தரகாண்ட் சட்டசபையில், பொது சிவில் சட்ட வரைவு மசோதாவை, அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் தங்களை பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கட்டாயமாக 18 வயதுக்கு கீழ் இருக்கக் கூடாது. லிவ்-இன் உறவில் இருப்பவர்களில் இருவரில் ஒருவர் 21 வயதுக்கு உட்பட்டு இருப்பின், இது குறித்து அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு சம்பந்தப்பட்ட பாதுகாவலர் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்கள் உறவை பதிவு செய்ய தவறும்பட்சத்தில், பொது சிவில் சட்டம் உத்தரகாண்ட் – 2024-இன் படி, அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும். அல்லது 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த நேரிடும். அல்லது இவை இரண்டும் தண்டனைகளாக வழங்கப்படும். மேலும், பதிவாளரிடம் அளிக்கப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பாக இருந்தால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது 3 மாதம் சிறைதண்டனையும், பதிவுசெய்வதில் தாமதம் ஏற்பட்டால், ஒரு மாதம் முதல் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டமானது உத்தரகாண்டில் இருக்கும் லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கும், லிவ்-இன் உறவில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கும் பொருந்தும். அதேநேரம், மாநிலத்திற்கு வெளியே இருப்பவர்களும், இந்த சட்டத்தின் உட்பிரிவான 381 பிரிவு (1)-இன் கீழ் தாங்கள் இருக்கும் பகுதியில் இருக்கும் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சட்டப்பூர்வமான குழந்தையாக கருதப்படுவர். அதேபோல், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண் தனித்து விடப்பட்டால், தனக்கான உரிமையைக் கோரி தனது லிவ்-இன் துணை உறவிடம் இருந்து பராமரிப்புத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் மசோதா கூறுகிறது. இதற்கான நிவாரணத்தை நீதிமன்றத்தை நாடி பாதிக்கப்பட்டவர் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *