ஜெய்ஸ்வால் அவுட் இல்லையா.. தலையில் கைவைத்த பென் ஸ்டோக்ஸ்.. சர்ச்சையான கேட்ச்.. என்ன நடந்தது?
இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டில் அடித்து சென்ற பந்தை இங்கிலாந்து அணியின் பென் ஃபோக்ஸ் தாவிப்பிடித்த கேட்ச் நாட் அவுட் என்று கூறப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2வது நாள் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஜோ ரூட் 122 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் ஜெய்ஸ்வால் – ரோகித் சர்மா கூட்டணி களமிறங்கியது.
இதில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மன் கில் – ஜெய்ஸ்வால் கூட்டணி இணைந்து பவுண்டரிகள் மூலமாக வேகமாக ரன்களை சேர்த்தது. வழக்கம் போல் ஆண்டர்சன் பவுலிங்கில் ஜெய்ஸ்வால் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். அதேபோல் ஸ்பின்னர்களை சுப்மன் கில் கவனமாக எதிர்கொண்டார். இதனால் இவர்களின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து வேகமாக வளர்ந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன்னை அட்டாக்கில் கொண்டு வந்தார். அவர் வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் பேட்டை வெளியில் கொண்டு வர, பந்து அவரின் பேட்டில் அடித்து விக்கெட் கீப்பர் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனை பார்த்த சக இங்கிலாந்து வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏனென்றால் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஜெய்ஸ்வால் 545 ரன்களை விளாசியுள்ளார். இதனால் ஜெய்ஸ்வாலை வீழ்த்தினால் மட்டுமே இங்கிலாந்து அணி இந்திய அணியை ஆல் அவுட் செய்வதை பற்றி சிந்திக்க முடியும். இதனால் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததாக ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் களத்தில் ஜெய்ஸ்வால் இருந்த ஜெய்ஸ்வால் கேட்ச் சரியாக பிடிக்கவில்லை என்று உறுதியாக இருந்தார்.
நடுவர்களுக்கும் பென் ஃபோக்ஸ் கேட்சை சரியாக பிடித்தாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் 3வது நடுவரிடம் விவகாரத்தை கொண்டு சென்றனர். அப்போது பென் ஃபோக்ஸ் கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே பந்து தரையில் பிட்சானது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் ரீ-பிளேவை பார்த்த பின்னரும் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் அவுட் என்று கொண்டாடினார்கள்.
இதையடுத்து 3வது நடுவர் ஜோயல் வில்சன் நாட் அவுட் என்று தீர்ப்பளித்தார். இதனை பெரிய திரையில் பார்த்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலையில் கை வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவரை தொடர்ந்து ஜோ ரூட், கிராலி உள்ளிட்ட வீரர்களும் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.