இந்திய வரலாற்றிலேயே எந்த வீரரும் தொடாத பிரம்மாண்ட சாதனை.. புரட்டிப் போட்ட ஜெய்ஸ்வால் ரெக்கார்டு

இந்திய அணியின் இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். எபக் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த அவர் இரட்டை சதம் அடிப்பதிலேயே புதிய வரலாறு படைத்து இருக்கிறார்.
இந்திய அளவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடர்களான ரஞ்சி ட்ராபி, துலீப் ட்ராபி மற்றும் இரானி கோப்பை ஆகிய மூன்று வித தொடர்களிலும் இரட்டை சதம் அடித்து இருந்தார் ஜெய்ஸ்வால். அதுவே பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம், ரஞ்சி ட்ராபி, துலீப் ட்ராபி, இரானி கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் தொடர் என நான்கு வித டெஸ்ட் தொடர்களிலும் இரட்டை சதம் அடித்த ஒரே இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே. இந்த சாதனையை இனி வேறு யாரும் உடைப்பார்களா? என்பதும் சந்தேகமே. இதில் ஜெய்ஸ்வால் அதிக அளவில் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பொதுவாக அதிரடி ஆட்டம் ஆடும் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுவார்கள். ஆனால், ஜெய்ஸ்வால் உள்ளூர் அளவில் 50 ரன்களை 100 ரன்களாக மாற்றுவதிலும், 100 ரன்களை இரட்டை சதமாக மாற்றுவதிலும் பெயர் பெற்று விளங்கினார். அதே செயல்பாட்டை சர்வதேச டெஸ்ட் போட்டியிலும் காட்டி இருக்கிறார் ஜெய்ஸ்வால்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் 35 ரன்களை கூட தொடாத நிலையில் ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 209 ரன்கள் குவித்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதைத் தொடர்ந்து இந்திய அணி தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட்டத்தை ஆடத் துவங்கியது. ஜெய்ஸ்வால் 15, ரோஹித் சர்மா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.