4 பிரிவுகளில் தாதா சாகேப் பால்கே விருதுகளை அள்ளிய ஜவான்… பாலிவுட்டை வியக்க வைத்த அட்லீ…
அட்லி இயக்கத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படம் 4 பிரிவில் தாதா சாகிப் பால்கே விருதை பெற்றுள்ளது. ஏற்கனவே வசூலில் சாதனை படைத்த ஜவான் திரைப்படம் தற்போது விருதுகளையும் குவித்து வருவதால் அட்லியை பார்த்து இந்தி திரையுலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக இந்தியில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். ராஜா ராணி படத்திற்கு முன்னதாக அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றி அனுபவம் பெற்றிருந்தார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அப்பா- மகன் என 2 கேரக்டர்களில் ஷாருக்கான் இந்த படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு பூர்த்தி செய்தார். முன்பு வெளியாகி ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த பதான் திரைப்படத்தை காட்டிலும், ஜவான் மிகச் சிறப்பாக உள்ளது என்று ஷாருக்கான் ரசிகர்கள் பலர் தெரிவித்திருந்தனர்.
ஷாருக்கான் உடன் சஞ்சய்தத், நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் ஜவான் படத்தில் இடம்பெற்றிருந்தனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1150 கோடிக்கு அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஓடிடியில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியான இந்த திரைப்படம் ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் சினிமாவில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை 4 பிரிவுகளில் ஜவான் வென்றுள்ளது.
அதாவது சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் (Critics) மற்றும் சிறந்த இசை ஆகியவற்றிற்காக ஜவான் படத்திற்கு விருது கிடைத்துள்ளது.
வர்த்தக ரீதியில் ஜவான் திரைப்படம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், அடுத்ததாக விருதுகளையும் அள்ளிக் குவிக்க தொடங்கியுள்ளது.
இதனால் இயக்குனர் அட்லியை பாலிவுட் திரையலகம் வியந்து பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்து அவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.