ஐபிஎல் ஃபைனலில் சர்ச்சையில் சிக்கிய ஜெய் ஷா.. ஒரே வீடியோவில் உலகம் முழுவதும் பிரபலமான சம்பவம்
மும்பை : 2023 ஆண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை செய்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜெய் ஷா ஒரு மோசமான செய்கையை செய்ததாக வீடியோ பரவியது. குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் இறுதிப் போட்டியில் கடைசி 3 ஓவர்களில் போட்டி பரபரப்பான நிலையில் இருந்த போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து இருந்த ஜெய் ஷா, தூரத்தில் இருந்த ஒருவரிடம் சைகை ஒன்றை செய்தார்.
அது பார்க்க ஆபாசமான சைகையைப் போல இருந்தது. இதை அடுத்து அவர் சைகை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. சிலர் அதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு மீம் வீடியோவாக அதை மாற்றினர். அதே சமயம், ஜெய் ஷா மீது அரசியல் ரீதியான விமர்சனமும் எழுந்தது.
2023இல் அந்த காரணத்தால் மட்டும் ஜெய் ஷா கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகவில்லை. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருக்கும் அவர், ஆசிய கோப்பை தொடரை நடத்திய விதத்திற்காகவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்த நிலையில், இந்தியா அங்கே செல்லாது என பிசிசிஐ கூறி விட்டதால் பாகிஸ்தான் மோதும் சில லீக் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானிலும், மீதமுள்ள போட்டிகள் இலங்கையிலும் நடைபெறும் வகையில் அந்த தொடர் மாற்றி அமைக்கப்பட்டது. இலங்கையில் மழையால் பல போட்டிகள் பாதிக்கப்பட்டன. பல போட்டிகளுக்கு டிக்கெட்கள் சரியாக விற்கவில்லை. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறியது.
அடுத்து 2023 உலகக்கோப்பை தொடரை பிசிசிஐ நடத்திய நிலையில், அந்த தொடரில் இலங்கை அணி, இந்தியாவிடம் படுதோல்வி அடைந்த போது இலங்கையில் பெரும் விவாதம் எழுந்தது. உச்சகட்டமாக இலங்கை கிரிக்கெட் அமைப்பை ஜெய் ஷா கட்டுப்படுத்துவதாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா வெளிப்படையாக குற்றச்சாட்டை முன் வைத்தார். அது கிரிக்கெட் உலகில் அதிர்வை ஏற்படுத்தியது.