பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பிய மக்களை ‘பொங்க’ வைச்சிட்டீங்களே.. திமுக அரசை விமர்சித்த ஜெயக்குமார்!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் என்பதால், பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே, ஜனவரி 14 வரை முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC)பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகத்தால் அறிவிக்கப்பட்டது.